டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக சில உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன. குறிப்பாக, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
அதனால், கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பேருந்தின் மூலம் மைதானத்துக்கு அழைத்து வரும்போது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், அதற்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்தியாவில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன.