ஏ டண்டணக்கா.. மழை வந்து ஆட்டம் குளோஸ்.. "பிரபுதேவி"களாக மாறிய தாய் வீராங்கனைகள்
சிட்னி: தாய்லாந்து - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை மகளிர் டுவென்டி 20 போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்ட நிலையில் தாய்லாந்து வீராங்கனைகள் குத்தாட்டம் போட்டு அந்த இடத்தை கலகலப்பாக்கினர்.
Recommended Video
மகளிர் டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடரில் தாய்லாந்து -பாகிஸ்தான் இடையிலான கடைசி ரவுண்ட் போட்டி நடைபெற்றது. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது.

தாய்லாந்து அணி சிறப்பாக விளையாடி 150 ரன்களை அடித்திருந்தது. பாகிஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது.
தாய்லாந்து அணி சிறப்பாகவே பேட் செய்தது அதாவது 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. நட்டாயா பூசாதம் சிறப்பாக ஆடினாலும், அரை சதம் போடும் வாய்ப்பை இழந்தார். 44 ரன்கள் அவருக்குக் கிடைத்தது. அதேசமயம், நட்டகான் சந்தம் 56 ரன்களை குவித்தார். இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 93 ரன்களைக் எடுத்திருந்தனர்.
20 ஓவர்களில் 150 ரன்களைக் தாய்லாந்து அணி குவித்திருந்தது. பாகிஸ்தான் தனது ஆட்டத்தைத் தொடங்கவிருந்த நிலையில், மழை வந்து விட்டது. இதனால் போட்டி தாமதமானது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியைத் தொடர முடியவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு போட்டியும் கைவிடப்பட்டது.
மழை வந்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் தாய்லாந்து வீராங்கனைகளில் ஐந்து பேர் படு ஜாலியாக குத்தாட்டம் போட்டு கூடியிருந்த ரசிகர்களை குதூகலப்படுத்தினர். வெங்கா பாய்ஸ் குழுவின் புகழ்மிக்க We Like to Party என்ற பாடலுக்கு வீராங்கனைகள் குத்தாட்டம் போட்டனர்.
விடுமா ஐசிசி.. உடனே இந்த வீடியோவை தனது டிவிட்டரில் போட்டு கலக்கி விட்டது. அதிலும் ஒரு வீராங்கனை தரையில் பல்டியெல்லாம் அடித்து அசத்தினார். கிட்டத்தட்ட எல்லோருமே "பிரபு தேவி"களாக மாறி கலக்கியிருந்தனர். மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும் தாய்லாந்து வீராங்கனைகளின் இந்த குத்தாட்டம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் ஐசிசி பகிர்ந்த இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது.
ஏராளமான ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி தெளித்தனர். தாங்கள் தாய்லாந்து அணியின் ரசிகர்களாக மாறிவிட்டதாக ஒரு தரப்பினர் கூற, ஆட்டத்தில் தோல்வியோ வெற்றியோ, அதை கொண்டாட வேண்டும் என்பதை இந்த வீராங்கனைகள் நினைவு படுத்துவதாக மற்ற தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த தொடரில் தாய்லாந்து அணியினர் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. வெற்றி பெறுவதற்கான சிறப்பான ரன்களை குவித்திருந்த தாய்லாந்து -பாகிஸ்தான் போட்டி ரத்தானாலும் கூட தாய்லாந்து வீராங்கனைகளின் சிறப்பான பேட்டிங் அனைவரையும் கவர்ந்து விட்டது என்னவோ உண்மைதான்.


Click it and Unblock the Notifications