The Ashes 2025: தோல்வியை நோக்கி இங்கிலாந்து அணி.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. என்ன நடந்தது?
பிரிஸ்பேன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடி வருகிறது. பாரம்பரியமிக்க இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பிரிஸ்பேனில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடக்கும் இந்த ஆட்டத்தில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 334 ரன்கள் சேர்த்தது. இதில் கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ஜாக் வெதரால்ட், மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அரை சதங்கள் அடித்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் என்ற நிலையில் தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
அலெக்ஸ் கெரி 63 ரன்கள் எடுக்க, பந்துவீச்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய மிட்செல் ஸ்டார்க், 141 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவித்து பேட்டிங்கிலும் ஜொலித்தார். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் சேர்த்து, 177 ரன்கள் முன்னணி பெற்றது. இதன்பிறகு இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், தொடக்க வீரர் சாக் கிராலி 44, பென் டக்கெட் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆலி போப் 26 ரன்களில் வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஜோ ரூட், இந்த இன்னிங்ஸில் வெறும் 15 ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பினார். ஹாரி புரூக் 15, ஜெமி ஸ்மித் நான்கு ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
3ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட இன்னும் 43 ரன்கள் குறைவாகும். இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி சாத்தியமாகும்.


Click it and Unblock the Notifications