பிரிஸ்பேன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜோ ரூட்டின் நீண்ட கால காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் மெஷினாகத் திகழ்ந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற குறை இருந்தது. 2025 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்த குறையை சுட்டிக் காட்டி ஜோ ரூட்டை கடுமையாக விமர்சித்து இருந்தன.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பிரிஸ்பேனில் சதம் அடித்து தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜோ ரூட் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனான ஜோ ரூட், ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் 16-வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் 9 அரைசதங்களை விளாசியிருந்தாலும், ஒருமுறை கூட அவரால் மூன்று இலக்க ஸ்கோரை எட்ட முடியவில்லை. 2021-ல் இதே பிரிஸ்பேனில் 89 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாக இருந்தது.
ஆனால் இன்று அந்த வரலாற்றை மாற்றியமைத்தார். 181 பந்துகளை நிதானமாக எதிர்கொண்ட ஜோ ரூட், 11 பவுண்டரிகளுடன் தனது முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
இந்த சதத்தின் மூலம் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 40-வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் 4-வது இடத்தில் உள்ளார். இன்னும் 12 சதங்கள் அடித்தால் சச்சினின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்புள்ளது.
இந்த சதத்தோடு சேர்த்து, ஆஸ்திரேலிய மண்ணில் 1000 டெஸ்ட் ரன்களைக் கடந்த 16-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றார். இங்கிலாந்து அணி தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில், ஜோ ரூட்டின் இந்தச் சதம் அந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஜோ ரூட் தனி ஆளாக நின்று இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 250 ரன்கள் தாண்ட முக்கிய காரணமாக இருந்தார். தொடக்க வீரர் ஜாக் கிரவ்லி 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பின் ஜோ ரூட் மட்டுமே இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களை சேர்த்தார்.
69 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழந்து 273 ரன்கள் சேர்த்து இருந்தது, அப்போது ஜோ ரூட் 113 ரன்கள் எடுத்து ஆடி வந்தார்.