மான்செஸ்டர் : ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஷாக் கிராலி இரட்டை சதம் அருகே வந்து அவுட் ஆகி வெளியேறினார்.
இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்ற நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. குறிப்பாக அந்த அணியின் மார்னஸ் லாபஸ்சேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ் ஆகியோர் எல்லாம் நன்றாக விளையாடி ரன்களை சேர்த்தாலும் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தனர். இதில் யாருமே 50 ரன்கள் அடிக்காததால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 317 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் இங்கிலாந்து வீரர் பென் டக்கட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு ஷாக் கிராலியுடன், மோயின் அலி இணைந்து விளையாடினார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தது.
அதிரடி காட்டிய மோயின் அலி 82 பந்துகளில் 54 ரன்கள் அடித்து வெளியேறினார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும்.
எனினும் மறுபுறம் ஷாக் கிராலி அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவை கதறவிட்டார்.67 பந்துகளில் அரை சதம் கடந்த ஷாக் கிராலி தன்னுடைய சதத்தை 93 பந்துகளில் பதிவு செய்தார். இதில் 12 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். அத்துடன் நிற்காமல் ஷாக் கிராலி தொடர்ந்து அதிரடியை காட்டினார். ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். பேஸ் பால் என்றால் என்ன என்பதை இன்று ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமே பார்த்தது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் ஷாக் கிராலி அதிரடி காட்டினார். 182 பந்துகளை எதிர்கொண்ட ஷாக் கிராலி 189 ரன்கள் சேர்த்து துரதிர்ஷ்டவசமாக போல்ட் ஆனார். இங்கிலாந்துக்காக அதிவேக இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 ரன்களில் அந்த வாய்ப்பை ஷாக் கிராலி வீணடித்தார். ஷாக் கிராலியின் இன்னிங்ஸில் 21 பவுண்டர்களும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று ஜோ ரூட்டும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.
64 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 361 ரன்கள் எடுத்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 44 ரன்கள் அதிகமாகும். இன்னும் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்க இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை விட 100 ரன்கள் அதிகம் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.