லண்டன்: தி ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடரில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி, வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதிரடி வீரர் ஜோர்டன் காக்ஸின் அதிரடி ஆட்டத்தால், தி ஹன்ட்ரட் தொடரின் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது.
கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 100 பந்துகளில் 4 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. இதுவே தி ஹன்ட்ரட் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அடித்த 208 ரன்களே சாதனையாக இருந்தது.

இன்வின்சிபிள்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான்டா 33 ரன்கள் மற்றும் வில் ஜாக்ஸ் 38 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதன் பிறகு களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ், மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 29 பந்துகளைச் சந்தித்த அவர், 10 இமாலய சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்.
குறிப்பாக, அறிமுக பந்துவீச்சாளர் அஜித் சிங் டேல் வீசிய ஒரே செட்டில் (5 பந்துகள்) நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அவருக்கு துணையாக ஆடிய சாம் கரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
227 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெல்ஷ் ஃபயர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ஸ்டீபன் எஸ்கினாஸி, ஜேசன் பெஹ்ரன்டார்ஃப் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அனுபவ வீரர் ஜானி பேர்ஸ்டோ 50 ரன்கள் எடுத்துப் போராடினாலும், மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. டாம் கோஹ்லர்-காட்மோர் 16 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார்.
இருப்பினும், ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியின் பந்துவீச்சை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இறுதியில், வெல்ஷ் ஃபயர் அணி 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
ஓவல் இன்வின்சிபிள்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டாம் கரன் 15 பந்துகளை வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பெஹ்ரன்டார்ஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், இரண்டு முறை சாம்பியனான ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.