
டோணியின் பதிவுகள்
பொதுவாக டோணி பத்திரிக்கையாளர்களிடம் பேசுவது குறைவு , ஆனாலும் அவர் சமயங்களில் ஆச்சர்யமாக கொடுக்கும் பேட்டிகளிலும் கூட வித்தியாசமாக பேசி மக்களை கவர்ந்து விடுவார். டோணி இந்திய அணியில் இருக்கும் வீரர்களிடம் எப்படி பேசுவார், வீரர்களிடம் உண்மையில் அவர் கேப்டன் கூலாகதான் நடந்து கொள்வாரா என பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்கிறது. இதையடுத்து சமீப காலங்களில் டோணி அணியில் இருக்கும் வீரர்களிடம் பேசும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. அவர் கீப்பிங் செய்யும் போது ஹிந்தியில் கூறும் வார்த்தைகள் அப்படியே வீடியோவில் பதிவாகி இணையத்தில் வெளியாகிறது. இப்படி வெளியாகும் வீடியோக்கள் அனைத்தும் பெரும்பாலும் வைரல் ரகம் தான்.

இந்திய அணிக்கு யார் கேப்டன்
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாக முழு பார்மில் இருந்த போதே டோணி தனது கேப்டன் பதவியை கோஹ்லிக்கு விட்டுக்கொடுத்தார். புதிய கேப்டனாக பொறுப்பேற்ற கோஹ்லி, அவரது ஆட்டத்தை போலவே கேப்டன்ஷிப்பையும் மிகவும் சிறப்பாகவே செய்து வருகிறார். ஆனாலும் சமயங்களில் உண்மையில் கோஹ்லிதான் கேப்டனா இல்லை டோணி கேப்டனா என மக்களுக்கு சந்தேகம் எழுந்து வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் டோணியின் 'கேப்டன்சி டச்' இந்திய அணியில் அதிகமாக தென்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் யார்தான் உண்மையில் அணியை வழி நடத்துவது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்பவும் டோணிதான் எல்லாம்
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் குறித்து இந்திய அணியின் பவுலர் சாஹல் சில நாட்களுக்கு முன் பேசியிருந்தார் அதில் "பொதுவாக கோஹ்லி பெரும்பாலான சமயங்களில் பீல்டிங் செய்ய சென்றுவிடுவார். அவரால் அடிக்கடி வந்து பவுலர்களுக்கு அறிவுரை கூற முடியாது. அந்த சமயங்களில் டோணி கோஹ்லியிடம் 'எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டு அவர் தனது ஸ்டைல் அறிவுரைகளை கூறுவார். பெரும்பாலான சமயங்களில் டோணிதான் என்னை வழிநடத்தி இருக்கிறார். இந்திய அணியை பெரும்பாலும் டோணிதான் வழிநடத்துகிறார்'' என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இந்திய அணியில் டோணியின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதாக கூறப்பட்டது.

கோஹ்லியை வழிநடத்தும் டோணி
இந்த நிலையில் தற்போது டோணி கோஹ்லியிடம் பேசும் வீடியோ ஒன்று பதிவாகியுள்ளது. ஸ்டெம்பில் இருக்கும் மைக் மூலமாக ஆடியோவும் இதில் தெளிவாக கேட்கிறது. அதில் டோணி கோஹ்லியிடம் ''அந்த பீல்டிங்கை மாற்றாதே, நான்தான் அங்கே நிற்க வைத்தேன், இந்த ஓவர் முடியும் வரை அங்கேயே இருக்கட்டும்" என்று கூறியிருக்கிறார். மேலும் "சொல்வதைக் கேள் கோஹ்லி, பால் ஸ்விங் ஆகவில்லை இரண்டு மூன்று பிளேயர்களை இங்கு பில்டிங் நிற்க வை'' என்று கூறியிருக்கிறார். அதேபோல் அவர் வீடியோவில் அனைவரையும் செல்லமாக கொஞ்சிக் கொஞ்சி பேசியதும் பதிவாகியிருக்கிறது. இந்த ஆடியோ மூலம் கோஹ்லியை விட டோணிதான் இந்திய அணியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











