டெல்லி : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மட்டும் விசா கடைசியாக கிடைத்துள்ளது.
அக்டோபர் 29 அன்று பாகிஸ்தான் அணி தன் முதல் பயிற்சிப் போட்டியில் ஆட உள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அந்தப் போட்டியில் மோத உள்ளது.

இந்த நிலையில், இந்தப் போட்டிக்கு ஐந்து நாட்கள் முன்பே கிளம்ப திட்டமிட்டு இருந்தது பாகிஸ்தான் அணி. துபாய்க்கு சென்று இரண்டு நாட்கள் அங்கே அணியை ஒருங்கிணைத்த பின், அங்கிருந்து இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம்.
ஆனால், விசா வர தாமதமானதால் அவர்கள் திட்டமிட்டபடி துபாயில் தங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், தங்கள் உலகக்கோப்பை திட்டங்களை பிசிசிஐ சீர்குலைத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)க்கு கடிதம் எழுதியது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் மற்ற அணிகளுக்கு எல்லாம் விசா கொடுக்கப்பட்ட நிலையில், எங்கள் அணிக்கு மட்டும் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பி இருந்தது. இது கிரிக்கெட் ஆடும் நாடுகள் மத்தியில் இந்தியா குறித்த தவறான சித்தரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கம் நியாயமே இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான், பாகிஸ்தான் வம்சாவளியினர் ஆகியோருக்கு விசா வழங்க கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளும். அதற்கு காரணம் விசா விண்ணப்பம் அளித்து இருப்பவரை பற்றி இந்தியாவின் பல்வேறு அரசு அமைப்புகள் முழுவதுமாக அறிந்த பின்னரே விசா வழங்கப்படும். இது அதிக நேரம் எடுக்கும் நடைமுறை.
ஆனால், இந்த நடைமுறை பல ஆண்டுகளாக வழக்கில் இருப்பதுதான். இது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு தெரிந்த ஒன்று தான். ஏற்கனவே, 2016 டி20 உலகக்கோப்பை தொடருக்கு வந்த போதும் இதே நடைமுறையை தான் அவர்கள் பின்பற்றி இருப்பார்கள்.
இந்த முறை பிசிசிஐ சார்பாக விசா விண்ணப்பங்கள் அனைத்து அணிகளுக்கும் ஆகஸ்ட் இறுதி வாரத்திலேயே கொடுக்கப்பட்டு விட்டது. பாஸ்போர்ட் உடன் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்தால் இந்திய அரசு தன் நடைமுறைகளை முடித்த பின் விசா அளிக்கப்படும்.
ஆனால், விண்ணப்பம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கொடுக்கப்பட்ட போது ஆசிய கோப்பை தொடரில் ஆடுவதற்காக இலங்கை செல்ல வேண்டும் என்பதால் பாகிஸ்தான் அணியால் பாஸ்போர்ட்டை வழங்க முடியவில்லை.
முதலில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் வெறும் விண்ணப்பத்தை அளித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. ஆனால், பாஸ்போர்ட் வழங்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதால் செப்டம்பர் 19 அன்று பாகிஸ்தான் அணி நாடு திரும்பிய பின் அந்த விசா விண்ணப்பங்கள் மீண்டும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதில் இருந்து ஆறு நாட்களில் இந்தியா விசாவை வழங்கி இருக்கிறது. ஆனால், அதற்குள் இந்தியா மற்றும் பிசிசிஐ பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாரபட்சம் காட்டியதாக கூறி சர்ச்சையை கிளப்ப முயற்சித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. ஆனால், இப்போது அந்த அணி தாமதமாக விசா விண்ணப்பங்களை அளித்தது தெரிய வந்துள்ளது. அவர்களின் குட்டு வெளிப்பட்டது.