ஐபிஎல்-ஐ வைத்து வைபவ் சூர்யவன்ஷியை வம்பிழுத்த இலங்கை வீரர்.. உண்மையில் நடந்தது என்ன?
தம்புள்ளா: இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் மோதிய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சம்பந்தப்பட்ட மோதல் சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. திங்கட்கிழமை நடைபெற்ற சூப்பர் ஓவர் ஆட்டத்தில் இலங்கை 'ஏ’ அணியிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 15 வயது இளம் வீரர் சூர்யவன்ஷி இலங்கை வீரர் ஒருவரை கையால் தள்ளினார். அதனால் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த முத்தரப்பு தொடரில் தொடக்கத்திலிருந்தே அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சீண்டல்களின் (sledging) உச்சகட்டமாகவே இந்த மோதல் வெடித்திருக்கலாம் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்திற்குப் பிறகு, இலங்கை 'ஏ' அணி வீரர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கிரிக்பஸ் (Cricbuzz) இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை 'ஏ' அணியின் விஷென் ஹலம்பகே, அதே மைதானத்தில் ஜூன் 9 அன்று நடைபெற்ற தொடரின் தொடக்க ஆட்டத்திலிருந்தே அவரை சீண்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

முதல் போட்டியில் இருந்தே ஹலம்பகே தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷியைக் கேலி செய்து வந்ததோடு, திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியிலும் அதைத் தொடர்ந்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது இந்த சீண்டல்கள் மேலும் தீவிரமடைந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக, "வீட்டுக்குப் போ, இது ஐபிஎல் (IPL) கிடையாது" என்ற தொனியில் கேலிப் பேச்சுகள் அவரை நோக்கி கூறப்பட்டுள்ளது.
இலங்கை 'ஏ' அணி வெற்றி பெற்ற சூப்பர் ஓவரில் வைபவ் சூர்யவன்ஷியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாத நிலையிலும், ஹலம்பகே தனது வார்த்தை தாக்குதலை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முறை, இலங்கை வீரர் சூர்யவன்ஷி மற்றும் அவரது பேட்டிங் இணையரான சூர்யான்ஷ் ஷெட்கே இருவரையும் நோக்கி ஆவேசமாக பாய்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தருணத்தில்தான் வைபவ் எதிர்வினையாற்றியுள்ளார். அதன்பின்னர், இலங்கையின் மூத்த சர்வதேச வீரரான நிரோஷன் டிக்வெல்லா தலையிட்டு நிலைமை மேலும் மோசமடையாமல் தடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வருத்தம் தெரிவிப்பு
தங்கள் அணி பெற்ற வெற்றியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்த இந்த சம்பவத்திற்காக, பல மூத்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், பின்னர் வைபவ் சூர்யவன்ஷியைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வீரர்கள் முத்தரப்பு தொடரில் பங்கேற்ற இலங்கை 'ஏ' அணியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், மாறாக 2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகளைத் தொடர்ந்து கவனித்து வந்த மூத்த வீரர்கள் என்றும், இந்த அசம்பாவிதங்கள் நடந்த விதம் குறித்து அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அதனால் அவரிடம் விளக்கம் கூறியதாக தெரிகிறது.
முன்னதாக, இலங்கை 'ஏ' அணியைச் சேர்ந்த சில வீரர்கள், இந்திய அணியிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருதியதாக செய்தி வெளியாகி இருந்தது. இருப்பினும், அவ்வாறு ஏதேனும் அதிகாரப்பூர்வ மன்னிப்பு கோரப்பட்டதா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. போட்டியின் பின் அரங்கேறிய இந்த காட்சிகள் மற்றும் அவை இலங்கை 'ஏ' அணியின் வெற்றியில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பிய விதம் குறித்து இலங்கை தேசிய அணியைச் சேர்ந்த பலரும் அதிருப்தியில் இருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications
