மீண்டும் ஒரு "சென்னை" வரவே வராது பாஸ்.. பிராவோ நெகிழ்ச்சி
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஈடு இணை கிடையாது. மீண்டும் ஒரு அணி வந்தாலும் கூட சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இணையாகாது. டோணியின் தலைமைத்துவத்தை நான் மிஸ் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார் வேயன் பிராவோ.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஸ்டார் வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரோவோ. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டு விட்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் பிரியும் நிலை ஏற்பட்டு விட்டது.
டோணி தலைமையில் புனே அணியில் அஸ்வின் உள்ளிட்ட சில சென்னை வீரர்கள் இணைந்துளளனர். அதோபோல ராஜ்கோட் அணியில், சுரேஷ் ரெய்னா தலைமையில் சில சென்னை வீரர்கள் இணைந்துள்ளனர்.

பிராவோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த ஐந்து வருடமாக ஆடி வந்தவர் பிரோவோ. தற்போது சுரேஷ் ரெய்னா தலைமையிலான அணிக்கு அவர் மாறியுள்ளார். இதுகுறித்து மலரும் நினைவுகளை வெளியிட்டுள்ளார் பிராவோ.

டோணியை மிஸ் செய்வேன்
சென்னை வந்த பிரோவோ செய்தியாளர்களிடம் பேசுகையில், நிச்சயம் டோணியின் கேப்டன்ஷிப்பை நான் மிஸ் செய்வேன். உலகின் மிகச் சிறந்த கேப்டன்களில் டோணியும் ஒருவர்.

ரெய்னாவுக்கு நல்ல வாய்ப்பு
பல்வேறு கேப்டன்களின் கீழ் விளையாடும் வாய்ப்பு வீரர்களுக்குக் கிடைக்கிறது. இப்போது சுரேஷ் ரெய்னாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வீரர்களாக நாங்கள் அவரை ஆதரிக்க வேண்டும். நிச்சயம் நாங்கள் அதைச் செய்வோம்.

அனுபவசாலி
சுரேஷ் ரெய்னா நல்ல அனுபவசாலி. அருமையான வீரர், அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பகிறோம். இன்னும் நான் அணியினரைச் சந்திக்கவில்லை. புதிய உரிமையாளர்கள் வந்துள்ளனர். புதிய சகாக்கள் கிடைத்துள்ளனர்.

சென்னைக்கு இணை இல்லை
எத்தனை அணிகள் வந்தாலும் சென்னைக்கு ஈடு இணை இல்லை. சென்னையைப் போல வேறு எந்த அணியும் வராது. இன்னொரு சிஎஸ்கேயை எதிர்பார்க்க முடியாது. ஆனால் சென்னை மக்கள் குஜராத் லயன்ஸ் அணியை (ராஜ்கோட் அணி) ஆதரிப்பார்கள் என நம்பகிறேன்.

கலக்கப் போகிறோம்
நான், ரெய்னா, மெக்கெல்லம், ஜடேஜா, வேயன் ஸ்மித் ஆகிய சென்னை வீரர்கள் எங்களது அணியில் உள்ளனர். எனவே சென்னை மக்கள் எங்களையே ஆதரிக்க வேண்டும் (சிரிக்கிறார்) என்றார் பிராவோ.


Click it and Unblock the Notifications