மூன்றாவது டெஸ்ட்.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா.. மீண்டும் பேட்டிங் சோதனை!
நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நாளை துவங்குகிறது. இதில் தனது வலிமையான பேட்டிங் வரிசையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் பவுலர்களின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில், பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிகவும் மோசமாக இருந்தது.
மிகவும் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டிருந்தபோதும், இரண்டு டெஸ்ட்களிலும் இந்திய அணி சுருண்டது மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் செயல்பாட்டுக்கு பல்வேறு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாய நிலையில் இந்தியா
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. தொடரை இழப்பதை தடுக்க, இந்த டெஸ்டில் தோல்வியை தவிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அணி உள்ளது.

பந்த் வருகிறார்
இந்த நிலையில், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், இந்திய அணிக்காக அறிமுகமாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனியரான தினேஷ் கார்த்திக் பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சரியாக செயல்படாததால், அடுத்த தோனியாக பார்க்கப்படும் பந்த் இந்த டெஸ்டில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் தவான்
அதேபோல், துவக்க ஆட்டக்காரர்களிலும் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். முரளி விஜய்க்கு பதிலாக ஷிகார் தவான் மீண்டும் களமிறக்கப்படலாம். தவானும், ராகுலும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள்.

வருகிறார் பும்ரா
பந்துவீச்சை பொறுத்தவரை, அஸ்வின் மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். அதனால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் வருவதால், உமேஷ் யாதவ் உட்கார வைக்கப்படுவார். இந்த டெஸ்ட் போட்டி வென்று, நம்பர் 1 அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இநதியா உள்ளது.


Click it and Unblock the Notifications