டி20 உலககோப்பை 2026: அசுர பலம் பெற்ற இந்திய அணி.. உடல் தகுதி பெற்றார் குட்டி கோலி திலக் வர்மா
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா முழு உடல் தகுதியை பெற்றுள்ளதால், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். அணியின் முக்கியமான மூன்றாவது வரிசை பேட்ஸ்மேனான இவர், உலகக் கோப்பைக்கான இந்தியாவின் பலமாகத் திகழ்கிறார். 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றபோது, இவரே அதிக ரன்கள் குவித்தவர்.
தசைப்பிடிப்பு காயத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த திலக் வர்மாவுக்கு, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்திலிருந்து (CoE) உடல்தகுதி அனுமதி கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி 7 அன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், அவர் சில காலம் சர்வதேச கிரிக்கெட் செயல்பாட்டிலிருந்து விலகியிருக்க நேர்ந்தது.

பிசிசிஐ வட்டாரங்கள், தெரிவித்த தகவல்படி, திலக் வர்மா சிறப்பு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பிப்ரவரி 3 அன்று இந்திய அணியுடன் மும்பையில் இணைவார். பிப்ரவரி 7 அன்று இந்தியா மற்றும் இலங்கை மைதானங்களில் T20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அவரது வருகை அணிக்குப் பெரும் உத்வேகத்தை அளிக்கும்.
23 வயதான திலக் வர்மா, சேஸிங்கில் விராட் கோலி போல் செயல்படுவதால், ரசிகர்கள்ய அரை அடுத்த கோலி என்று அழைப்பதுண்டு. T20I போட்டிகளில் 144.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1183 ரன்கள் எடுத்துள்ளார் இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஆறு அரை சதங்கள் அடித்துள்ளார்.
திலக் வர்மா ஜனவரி 7 அன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின்னர், பிசிசிஐ சிறப்பு மையத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். தனது முழு உடல்தகுதியை நிரூபிப்பதற்காக, அவருக்கு வெள்ளிக்கிழமை அன்று ஒரு சிமுலேஷன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடப்பு சாம்பியனான இந்தியா, T20 உலகக் கோப்பையின் தொடக்க நாளில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அதற்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் திலக் வர்மாவை விளையாட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய T20 தொடரில் திலக் வர்மா பங்கேற்காத நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அவருக்குப் பதிலாக விளையாடினார். அமெரிக்காவுடன் பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளும் இந்தியாவின் குரூப்பில் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications