Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட், டி20, ODI.. எதுவாக இருந்தாலும் புரிந்து ஆடும் 2 இந்திய வீரர்கள்.. திலகரத்னே தில்ஷன் பேட்டி

சென்னை: இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான திலகரத்னே தில்ஷன், கிரிக்கெட் விளையாட்டின் பல்வேறு வடிவங்கள், தலைமுறைகள் மற்றும் நவீன கிரிக்கெட் வளர்ச்சியை நேரில் பார்த்தவர். தனது தனித்துவமான "தில்ஸ்கூப்" ஷாட் மூலம் வெள்ளைப்பந்து (ஒருநாள், டி20) கிரிக்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான தில்ஷன், தற்போதும் உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் ஒரு குரலாக விளங்குகிறார்.

பிக் கிரிக்கெட் லீக் சீசன் 2 தொடரின் போது நமது மைகேல் (Mykhel) ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், இந்தத் தொடரின் தனித்துவமான பின்னணி, டி20 கிரிக்கெட்டின் எழுச்சி, டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி, இலங்கையின் அடுத்த தலைமுறை திறமைகள் மற்றும் ஈட்டி எறிதல் வீரன் ருமேஷ் பதிராகேவின் வளர்ச்சி என பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும், சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரை, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவங்களிலும் தங்களது ஆட்டத்தை சிறப்பாக மாற்றியமைத்துக் கொண்டது பற்றியும் பேசினார். தில்ஷன் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான பதில்கள்:

கேள்வி: நவீன கிரிக்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரிய ஸ்கோர்கள் எடுக்கப்படுகின்றன. பேட்டிங் ஏன் இவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது?

பதில்: கிரிக்கெட் விளையாட்டு இப்போது முற்றிலும் மாறிவிட்டது. முன்பு ஒருநாள் போட்டிகளில் 250 அல்லது 260 ரன்கள் எடுத்தால் அதுவே மிகப்பெரிய ஸ்கோராகக் கருதப்பட்டது. ஆனால் இன்று 300 ரன்கள் எடுத்தால் கூட அது பாதுகாப்பான ஸ்கோர் இல்லை என்ற சூழ்நிலை உள்ளது. டி20 கிரிக்கெட் வடிவம் வீரர்களின் ஆட்ட அணுகுமுறையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் கனடா போன்ற புதிய நாடுகளுக்கு கிரிக்கெட்டைக் கொண்டு சென்று அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. என்னைப் பொறுத்தவரை டி20 என்பது ரசிகர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு. ஆனால் ஒரு வீரரின் உண்மையான திறமை என்பது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் மூலமாகவே மதிப்பிடப்படுகிறது. வணிக வளர்ச்சிக்கும் ரசிகர்களுக்கும் டி20 அருமையானது என்றாலும், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை நீங்கள் மதிப்பிட விரும்பினால், அவரது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி சாதனைகளைத் தான் பார்க்க வேண்டும்.

Tilakaratne Dilshan Interview On Shubman Gill KL Rahul Modern Cricket T20 Evolution And Future Stars

கேள்வி: டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் பந்துவீச்சாளர்கள், டி20 போட்டிகளிலும் தொடர்ந்து சாதிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

பதில்: புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர்கள் எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதால் எங்கும் தப்பிப்பிழைக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் வீசப்படும் ஒவ்வொரு பந்துக்கும் பந்துவீச்சாளர் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் பேட்டர்கள் இப்போது தில்ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப் எனப் பல்வேறு புதுமையான ஷாட்டுகளை ஆடுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் இனி ஒரே லைன் மற்றும் லென்த்தை மட்டுமே நம்பி பந்துவீச முடியாது. சூழ்நிலைகளுக்கும் ஆட்டத்தின் தன்மைக்கும் ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக்கொள்ளும் பந்துவீச்சாளர்களே சிறந்தவர்களாக உருவாகிறார்கள். இதனை நாம் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

கேள்வி: இதே விதிமுறை பேட்டர்களுக்கும் பொருந்துமா?

பதில்: கண்டிப்பாகப் பொருந்தும். சில பேட்டர்கள் அனைத்து ஃபார்மட்களுக்கும் ஏற்ப தங்களை எளிதாக மாற்றிக்கொள்கிறார்கள், சிலரோ திணறுகிறார்கள். சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்களைப் பாருங்கள். அவர்கள் ஃபார்மட்டுக்குத் தகுந்தபடி தங்களின் ஆட்டத்தை எப்படி மாற்றுவது என்பதைப் புரிந்து வைத்துள்ளனர். ஆனால் 3 ஃபார்மட்களிலும் ஒரே மாதிரியாகச் சாதிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அதனால்தான் உலக அளவில் பெரும்பாலான நாடுகள் இப்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்குத் தனித்தனி அணிகளையும், வெவ்வேறான கேப்டன்களையும் நியமிக்கத் தொடங்கியுள்ளன.

கேள்வி: கிரிக்கெட் விளையாட்டு ஃபார்மட்களுக்கு ஏற்ப தனித்துவமாகப் பிரியும் பாதையை நோக்கிச் செல்கிறதா?

பதில்: ஆம், ஏனெனில் பல வீரர்கள் இப்போது குறுகிய வடிவிலான போட்டிகளையே அதிகம் விரும்புகிறார்கள். உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக, வீரர்கள் மிக விரைவாகவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் மெதுவாக சில குறிப்பிட்ட வலுவான நாடுகளுக்குள் மட்டுமே சுருங்கி வருகிறது. கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், ஏனெனில் அதுதான் கிரிக்கெட்டின் மிக உயர்ந்த வடிவம். ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் எடுப்பதோ அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதோ, டி20 கிரிக்கெட்டில் ரன்கள் குவிப்பதை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு பெரிய சவாலாகும்.

கேள்வி: மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

பதில்: கடந்த சில வருடங்களில் மகளிர் கிரிக்கெட் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று தொழில்முறை தரம் மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றில் ஆண்களின் கிரிக்கெட்டுக்கும் பெண்களின் கிரிக்கெட்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதும் எனக்குத் தெரிவதில்லை. அவர்கள் 250 ரன்களுக்கு மேல் இலக்குகளைத் துரத்துகிறார்கள், மைதானத்தில் டைவ் செய்து பந்துகளைத் தடுக்கிறார்கள், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டு வருகிறார்கள். முன்பு சில குறிப்பிட்ட அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் இப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு இணையாக தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளும் கடுமையான சவால்களை அளிக்கின்றன. இதனால் வரவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி: இலங்கை மகளிர் அணி கேப்டன் சமாரி அட்டபட்டு மற்றும் இலங்கை அணிக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

பதில்: இலங்கை மகளிர் அணியில் சமாரி அட்டபட்டு மிக முக்கியமான வீரர். அவர் பல ஆண்டுகளாக இலங்கை மகளிர் கிரிக்கெட்டைத் தனது ஒற்றைத் தோளில் தாங்கிப் பிடித்து வழிநடத்தி வருகிறார். சமீபகாலமாக இலங்கை அணி மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது, அவர்களிடம் தரமான ஸ்பின்னர்களும் உள்ளனர். அங்குள்ள ஆடுகளங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் விரைவாகத் தங்களை மாற்றிக்கொண்டு, சமாரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணி ஏதேனும் ஒரு சாதனையைப் படைக்க நல்ல வாய்ப்புள்ளது.

கேள்வி: உங்களது மகளும் இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். அவரது வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: அவரது விளையாட்டுத் திறன் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த போட்டிகளில் 2 அரைசதங்களை அவர் அடித்துள்ளார். பங்களாதேஷில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பைக்காக இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. அவர்கள் விரைவில் பயிற்சித் தொடருக்காக இந்தியா வரவுள்ளனர். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இந்த 19 வயதுக்குட்பட்டோர் அணி மிகவும் திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர்கள் மற்றொரு ஐசிசி கோப்பையைப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன். அந்த கோப்பைக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம்.

கேள்வி: இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரம் ருமேஷ் பதிராகே பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இலங்கையில் விளையாட்டுத் திறமைகள் நிறைந்த இளைஞர்கள் பலர் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் அதே அளவிலான வசதிகளும் நிதியுதவியும் மற்ற தடகள வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைத்தால் இன்னும் பெரிய சாதனைகளை அவர்களால் செய்ய முடியும். ருமேஷ் பதிராகே தனது சாதனையால் அனைத்து இலங்கையர்களையும் பெருமையடையச் செய்துள்ளார். அவர் தொடர்ந்து உலக சாதனைகளைப் படைத்து, எதிர்காலத்தில் நாட்டிற்காக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வார் என்று நம்புகிறேன்.

கேள்வி: இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் கட்டமைப்பில் உங்களைக் கவர்ந்த விஷயம் எது?

பதில்: இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு உலகிலேயே மிகச் சிறப்பானது. சூர்யகுமார் யாதவ் போன்ற சர்வதேச அளவில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் கூட, மீண்டும் தங்களின் மாநில அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் அவசியமான ஒன்று. இந்த வலுவான உள்நாட்டு விளையாட்டு கட்டமைப்பே இந்தியா தொடர்ந்து பல தரமான சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க முக்கிய காரணமாகும். உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவால் அனைத்து ஃபார்மட்களிலும் 3 அல்லது 4 போட்டித்தன்மை வாய்ந்த சர்வதேச அணிகளை ஒரே நேரத்தில் களமிறக்க முடியும்.

கேள்வி: இலங்கை கிரிக்கெட்டிலும் இதே போன்றதொரு கட்டமைப்பை உருவாக்க முடியுமா?

பதில்: நிச்சயம் உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் புதிய அதிகாரிகள் மற்றும் முன்னாள் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பலர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். எனவே இந்த அமைப்பில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கையில் எப்போதும் திறமையான வீரர்களுக்குப் பஞ்சம் இல்லை. அந்தத் திறமைகளைச் சரியாகக் கண்டறிந்து, அவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான சரியான உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்குவதே இப்போதைய முக்கிய சவாலாகும்.

கேள்வி: மற்ற கிரிக்கெட் தொடர்களை விட பிக் கிரிக்கெட் லீக் எவ்வாறு தனித்து விளங்குகிறது?

பதில்: இது ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் கட்டமைப்பு என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத அமெச்சூர் கிரிக்கெட் வீரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அவர்கள் சர்வதேச வீரர்களுடன் இணைந்து, தரமான மைதானங்களில், மின்விளக்கு வெளிச்சத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த சீசனின் முதல் 2 போட்டிகளிலேயே இந்த அமெச்சூர் வீரர்கள் பலர் மிகச் சிறப்பாக விளையாடுவதை நாம் பார்த்தோம். கடந்த சீசனில் இந்த லீக்கில் விளையாடிய சில வீரர்கள், அதன் மூலம் முதல் தர கிரிக்கெட் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்று கேள்விப்பட்டேன். இந்தத் தொடர் உண்மையிலேயே பல வீரர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியது.

கேள்வி: கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது தொழில்முறை அல்லாத பின்னணியில் இருந்து வரும் வீரர்களுக்கு இந்த லீக் எவ்வளவு முக்கியம்?

பதில்: இந்த தொடரின் விதிகள்தான் இதன் உண்மையான அழகு. இதில் அமெச்சூர் வீரர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு அமெச்சூர் வீரர் டாப் ஆர்டரிலும், மற்றொருவர் மிடில் ஆர்டரிலும் பேட்டிங் செய்ய வேண்டும். அதேபோல, இவர்களில் சிலர் முக்கியமான ஓவர்களையும் வீச வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், இந்தத் தொடர் சர்வதேச அல்லது முதல் தர கிரிக்கெட் வீரர்களை மட்டுமே சார்ந்து இருக்கவில்லை. இந்த அமெச்சூர் வீரர்களுக்குத் தங்களின் திறமையை உலகிற்குக் காட்ட உண்மையான வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதன் மூலம் அவர்கள் மாநில அணிகள் மற்றும் தொழில்முறை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்க முடியும். கடந்த ஆண்டே இதற்கான உதாரணங்களை நாம் பார்த்துள்ளோம். அதனால்தான் இந்த லீக் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நான் கூறுகிறேன்.

10 வயதில் அண்ணன் வைபவ் சூர்யவன்ஷிக்கு சவால்.. தம்பி ஆசிர்வாத் அடித்த அதிரடி சதம்.. பாராட்டு பதிவு

10 வயதில் அண்ணன் வைபவ் சூர்யவன்ஷிக்கு சவால்.. தம்பி ஆசிர்வாத் அடித்த அதிரடி சதம்.. பாராட்டு பதிவு

கேள்வி: ஒரு சர்வதேச நட்சத்திரமாக, இந்தத் தொடரின் போது இந்த வீரர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவுகிறீர்கள்?

பதில்: அவர்கள் எப்போதும் என்னிடம் வந்து பல்வேறு சந்தேகங்களைக் கேட்பார்கள். பெரிய போட்டிகளுக்குத் தயாராவது எப்படி, பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பதற்றமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி அவர்கள் அறிய விரும்புகிறார்கள். இந்தத் தொடர் மிகக் குறுகிய காலமே நடைபெற்றாலும், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் எவ்வாறு பயிற்சி செய்கிறார்கள், மைதானத்திலும் வெளியிலும் தங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து அவர்கள் நிறையக் கற்றுக்கொள்கிறார்கள். கிரிக்கெட்டில் சிறிய விஷயங்கள்தான் பெரிய வித்யாசத்தைப்படுத்தும். இந்த வீரர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கோ அல்லது மாநில அணிகளுக்கோ திரும்பும்போது இந்த அனுபவங்களை மற்ற வீரர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வீரரும் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் பல கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்காத சிறந்த தளம் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.

Story first published: Saturday, June 13, 2026, 11:44 [IST]
Other articles published on Jun 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+