நெல்லை : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ஆம் ஆண்டு தொடரில் திண்டுக்கல் நெல்லை அணிகள் மோதின. திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக அவர்களின் கேப்டன் கே.பி அருண் கார்த்திக் 39 ரன்கள் எடுக்க, 7வது வீரராக களமிறங்கிய ஆல் ரவுண்டர் என்.எஸ் ஹரீஷ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் அதிகபட்சமாக சுபோத் குமார் பாட்டீ மற்றும் எம்.மதிவாணன் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. அந்த அணியின் ஓப்பனர்கள் ஷிவம் சிங் மற்றும் விமல் குமார் இணைந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 117 ரன்கள் குவித்தனர்.
மேலும் இந்த சீஸனில் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மற்றும் ஒட்டுமொத்தமாக இந்த சீஸனின் சிறந்த பார்ட்னர்ஷிப்பையும் இவ்விரு வீரர்கள் இந்த ஆட்டத்தில் பதிவு செய்தனர். அற்புதமாக விளையாடிய ஷிவம் சிங் தொடர்ச்சியாக தனது 3வது அரைசதத்தைப் பதிவு செய்து 39 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம் மிகவும் நிதானமாக விளையாடி வந்த இளம் வீரர் விமல் குமார் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது முதல் அரைசதத்தை அடித்தார்.சிறப்பாக விளையாடி வந்த விமல் குமார் 53 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக நிதிஷ் ராஜகோபாலின் துல்லியமான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாகி வெளியேற,ஆட்டம் சற்று நெல்லை ராயல் கிங்ஸ் பக்கம் சென்றது. கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற போது களத்தில் ஆதித்யா கணேஷ் மற்றும் அதிரடி வீரர் சுபோத் பாட்டீ விளையாடினர். அந்த ஓவரில் சுபோத் பாட்டீ ஒரு சிக்ஸர் அடித்தாலும் பொய்யாமொழியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சில் அதே ஓவரில் அவர் தனது விக்கெட்டை இழந்தார்.
கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சோனு யாதவ் வீசிய 19வது ஓவரில் திண்டுக்கல் டிராகன்ஸ் 14 ரன்கள் எடுக்க ஆட்டம் திண்டுக்கல் பக்கம் சென்றது. இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனின் ப்ளேஆஃப்ஸ் சுற்றுக்கு இரண்டாவது அணியாக நுழைந்தது. மேலும் இந்தப் போட்டியில் தோற்றாலும் நெல்லை ராயல் கிங்ஸும் 3வது அணியாக ப்ளேஆஃப்ஸிற்குள் நுழைந்தது.