சேலம் : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேலம், கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அற்புதமாக விளையாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.
நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் 28 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். இதே போன்று அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ராம் அர்விந்த் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்ததோடு இந்த சீஸனில் அதிவேக அரைசதத்தை இந்தப் போட்டியில் அடித்தார். 22 வயதான அரவிந்த், 5 இமாலய சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் கோவை அணியின் ஸ்கோர் கடுமையாக உயர்ந்தது. சேலம் ஸ்பார்ட்டன்ஸைப் பொறுத்தவரை சன்னி சந்து சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

20 ஓவர்களில் 200 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆரம்பம் முதலே விக்கெட்களை பறிகொடுக்கத் தொடங்கியது. அந்த அணியின் ஓப்பனர்கள் அமித் சாத்விக்(0) ரன் எதுவும் எடுக்காமலும் மற்றொரு ஓப்பனர் மோகித் ஹரிஹரன் 7 ரன்களிலும் கெளதம் தாமரை கண்ணனிடம் விக்கெட்களை இழந்தனர். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பவர்ப்ளேவிற்குள்ளாக 4 முக்கிய பேட்டர்களின் விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் சன்னி சந்து 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து சிறிது ஆறுதல் அளிக்க அவரும் தனது விக்கெட்டை ரன் அவுட்டில் பறிகொடுக்க, அத்நான் கானும் ஷாரூக் கானின் ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானதோடு தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் 4 முறையாக தோல்வியைத் தழுவியது.
மறுபுறம் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் 5வது வெற்றியைப் பதிவு செய்ததோடு புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மேலும் டி.என்.பி.எல் 2023 ப்ளேஆஃப்ஸ் சுற்றுக்குள் முதல் அணியாக லைகா கோவை கிங்ஸ் நுழைந்து மீண்டும் தங்களின் ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.
லைகா கோவை கிங்ஸின் பெளலிங்கில் அதிகபட்சமாக கெளதம் தாமரை கண்ணன் 3 விக்கெட்களை வீழ்த்த, அந்த அணியின் கேப்டன் ஷாரூக் கான் தனது மதிநுட்பமிக்க பந்துவீச்சால் 2 விக்கெட்களைக் கைப்பற்றியதோடு ஏத்தர் பர்ப்பிள் கேப் பட்டியலில் அதிக விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்திலுள்ளார்.
வெற்றிக்குப்பின் லைகா கோவை கிங்ஸின் கெளதம் தாமரை கண்ணன் பேசுகையில், "எங்கள் வெற்றிக்கு பிரத்யேகமான காரணங்கள் எதுவுமில்லை ஒரு அணியாக நல்ல திட்டத்துடன் களமிறங்கி அதை முடிந்தவரை சரியாக செயல்படுத்துகிறோம் என்று கூறினார்.