கோவை : டிஎன்பிஎல் லீக் கிரிக்கெட் தொடரில் கோவை, நெல்லை அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, லைகா கோவை கிங்ஸின் ஓப்பனர் சச்சின் (0) ரன் எதுவும் எடுக்காமல் சோனு யாதவிடம் ஆட்டமிழந்து அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
ஆனால் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மற்றொரு ஓப்பனர் சுரேஷ் குமார் மற்றும் சாய் சுதர்ஷன் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தனர்.லைகா கோவை கிங்ஸின் அதிரடி வீரர் ஜெ சுரேஷ் குமார் தன் அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து பொய்யாமொழியின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஐபிஎல் புகழ் சாய் சுதர்ஷன் லைகா கோவை கிங்ஸின் ரன் வேகத்தை குறைக்காமல் உயர்த்தி வந்தார். 3வது விக்கெட்டிற்கு சாய் சுதர்ஷனுடன் ராம் அர்விந்த்(18 ரன்கள்) ஜோடி சேர இவ்விருவரும் இணைந்து 68 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்தடுத்த இரண்டு பார்ட்னர்ஷிப்களால் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங்கில் முன்னிலை வகித்தது. மறுபுறம் நெல்லை ராயல் கிங்ஸின் பெளலர்கள் சாய் சுதர்ஷனின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் மிகவும் தடுமாறினர். அதோடு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது 11வது அரைசதத்தை சாய் சுதர்ஷன் பதிவு செய்தார். இந்த சீஸனில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அரைசதம் விளாசினார்.
இறுதிக்கட்டத்தில் ஷாரூக் கான். தன் வழக்கமான பாணியில் சந்தீப் வாரியர் ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாச லைகா கோவை கிங்ஸின் ஸ்கோர் உயர்ந்தது. இந்த நிலையில் சாய் சுதர்ஷன் துரதிர்ஷ்டவசமாக 52 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி மீண்டும் ஒரு முறை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஷாரூக்கான் 17 ரன்களில் ஆட்டமிழக்க, லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணியில் நட்சத்திர வீரர் அருண்கார்த்திக் டக் அவுட் ஆனார். ஈஸ்வரன் 3 ரன்களிலும், ஸ்ரீ நிரஞ்சன் 25 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, நெல்லை அணி தடுமாறியது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில்குருசாமி அஜித்தேஷ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
குறிப்பாக 8 இமாலய சிக்சர்கள், 7 பவுண்டரிகளை அடித்து குருசாமி 58 பந்துகளில் எல்லாம் சதம் விளாசினார். இந்த நிலையில் கடைசி ஓவரில் நெல்லை வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. குருசாமி 4வது பந்தில் ரன் அவுட் ஆக, கடைசி 2 பந்தில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது களத்திற்கு வந்த பொய்யாமொழி முதல் பந்திலேயே சிக்சர்களுக்கு பந்தை விரட்டினார். இதனையடுத்து, கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுக்க, நெல்லை அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது.