கோவை : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் அஸ்வின் அபாரமாக செயல்பட்டு அசத்தினார். கோவையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,
டாஸ் வென்று பால்சி திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனராக அந்த அணியின் கேப்டனும் அனுபவம் வாய்ந்த வீரருமான கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் ஜாஃபர் ஜமால் களமிறங்கினர் திண்டுக்கல் டிராகன்ஸைப் பொறுத்தவரை பெளலிங்கில் ரவிச்சந்திரன் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி போன்ற இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் திறமையான இளம் பெளலர்கள் நிறைந்திருந்தனர்.

அவர்களுக்கு எதிராக ஆரம்பம் முதலே பால்சி திருச்சி பேட்டர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் திருச்சி அணி வெறும் 49 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ 41 பந்துகளில் 48 ரன்கள் மற்றும் ஆர் ராஜ்குமார் 22 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து 7வது விக்கெட்டிற்கு 65 ரன்கள் சேர்த்தனர். இதனால் 19.1 ஓவர்களில் வெறும் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பால்சி திருச்சி அணி இழந்தது.
'
திண்டுக்கல் டிராகன்ஸைப் பொறுத்தவரை ஐபிஎல் வீரர் வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்ற அவருக்கு உறுதுணையாக சரவணகுமார், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால், முதல் ஓவரிலேயே இந்திய நட்சத்திர வீரரான 'யார்க்கர் கிங்' நடராஜன் பெளலிங்கில் விமல் குமார்(0) ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து திண்டுக்கல் டிராகன்ஸிற்கு அதிர்ச்சியளித்தாலும் 2வது விக்கெட்டிற்கு அனுபவ வீரர் பாபா இந்திரஜித் மற்றும் இளம் புதுமுக வீரர் ஷிவம் சிங் இணைந்து 58 ரன்கள் சேர்த்தனர்.
ஷிவம் சிங் வெறும் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 46 ரன்களை எடுத்து அரைசதத்தை எட்ட முடியாமல் அலெக்சாண்டர் சுழலில் ஜாஃபர் ஜமாலின் அற்புதமான கேட்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் பாபா இந்திரஜித்தும் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சரவணகுமாருக்கு மாற்றாக இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சரத் குமாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் 5 ரன்களில் தனது விக்கெட்டை ஆண்டனி தாஸிடம் இழந்தார். இறுதியில் ஆதித்யா கணேஷ்(20*ரன்கள்) நிதானமாக விளையாட மறுமுனையில் சுபோத் பாட்டீ வெறும் 8 பந்துகளில் 19*ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நீடித்து திண்டுக்கல் டிராகன்ஸின் வெற்றியை உறுதி செய்தனர். பால்சி திருச்சி தங்களது முதல் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸிடம் தோல்வியடைந்தது.