கோவை : டி என் பி எல் கிரிக்கெட் தொடரில் வித்தியாசமான ஒரு சம்பவத்தை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்திருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்காத நிலையில் போடி முடிந்த மறுநாளே அவர் தமிழகம் வந்து டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருக்கிறார்.
அஸ்வினை எப்போதுமே ரசிகர்கள் கிரிக்கெட் விஞ்ஞானி என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் கிரிக்கெட்டில் உள்ள விதிகளை வித்தியாசமாக பயன்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். அஸ்வினின் பெறும் முயற்சியால் தான் மான்கட் முறை அதிகாரப்பூர்வமாக ரன் அவுட் என அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று தம்மால் பேட்டிங்கில் சரியாக விளையாட முடியவில்லை என்று கூறி ஆட்டமிழக்காமல் வெளியேறுகிறேன் என்றும் அஸ்வின் கிரிக்கெட் விதியை பயன்படுத்தினார். இந்த நிலையில் டி.என்.பி.எல். தொடரில் திண்டுக்கல் அணிக்கு எதிராக விளையாடும் அஸ்வின் திருச்சிக்கு எதிராக பந்து வீசினார். அப்போது ஆட்டத்தின் 12.5 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் ராஜ்குமார் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
இதற்கு கள நடுவர் அவுட் கொடுக்க பேட்ஸ்மேன் ராஜ்குமார் உடனடியாக drs முடிவை கேட்டார். அப்போது மூன்றாம் நடுவர் சோதித்துப் பார்த்தபோது, பேட் தரையில் பட்ட போது பந்து பேட்டை கடந்து சென்று இருக்கிறது. இதனால் பந்து பேட்டில் படவில்லை என்று கூறி இதற்கு நாட் அவுட் வழங்கினார். பொதுவாக பேட்ஸ்மேன் டி ஆர் எஸ் முடிவைக் கேட்டு அதை மூன்றாம் நடுவர் மாற்றினாலோ இல்லை அவுட்டு கொடுத்தாலோ, போட்டி அடுத்த பந்துக்கு சென்று விடும்.
ஆனால் அஸ்வின் இந்த முடிவை ஏற்காமல் தங்களுக்கு இருந்த டி ஆர் எஸ் ஐ கேப்டன் என்ற முறையில் பயன்படுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனினும் விதிப்படி தங்களுக்கு இருக்கும் டிஆர்எஸ்ஐ எப்படி வேண்டாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அஸ்வின் இவ்வாறு செய்தார். இதனை அடுத்து மீண்டும் மூன்றாம் நடுவர் அதே பந்தை ரிப்ளே செய்து அவுட்டா இல்லையா என மீண்டும் பார்த்த கொடுமையும் நடந்தது.
இதில் மீண்டும் மூன்றாம் நடுவர் இதனை நாட் அவுட் என அறிவித்தார். அப்போது கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டிருந்தவர்கள் இதை எத்தனை முறை பார்த்தாலும் ஒரே வீடியோவை தானே நடுவர் பார்ப்பார். ஏன் அஸ்வின் மீண்டும் டி ஆர் எஸ் கேட்கிறார் என்று விமர்சனம் செய்தார்கள். எனினும் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே பந்திற்கு பேட்ஸ்மேனும் பந்துவீச்சாளரும் இரண்டு முறை டி ஆர் எஸ் கேட்டது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.