நெல்லை : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இருந்த நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, பால்சி திருச்சி அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஒரு கட்டத்தில் 73/6 என்று இக்கட்டான தருணத்திலிருந்த இருந்தது.
7வது விக்கெட்டிற்கு சிபி மற்றும் சசிதேவின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அதிகபட்சமாக சிபி 31 ரன்கள் எடுத்தார். பால்சி திருச்சியின் பெளலிங்கைப் பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார

இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய பால்சி திருச்சி அணிக்கு 130 ரன்கள் மட்டுமே தேவை என்ற சுலபமான இலக்கை நோக்கி அந்த அணி களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஹரீஷ் குமாரின் வேகத்தில் டி சரண் (0)ஆட்டமிழக்க பால்சி திருச்சி அதிர்ச்சிக்குள்ளானது. அதன் பின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ வெறும் 7 ரன்களில் பாபா அபரஜித் சுழலில் ஆட்டமிழந்தார். ஆண்டனி தாஸ்(0) ரன் எதுவும் எடுக்காமல் அனுபவ வீரர் ராஹில் ஷாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேவிற்குள்ளாக பால்சி திருச்சி 3 முக்கிய விக்கெட்களை இழந்தாலும் அந்த அணிக்கு நம்பிக்கைத் தரும் வகையில் டாரல் ஃபெராரியோ 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மற்ற எந்த பேட்டரும் இந்தப் போட்டியில் தங்களின் பங்களிப்பை அளிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பால்சி திருச்சி ஒரு கட்டத்தில் 56 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றிக்கான பாதையை நோக்கி பயணித்தது. ஆனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் சிலம்பரசனின் சுழலில் சிக்கி திருச்சி அணி அடுத்த 15 ரன்களில் 7 விக்கெட்களை பறிகொடுத்து 13.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சிலம்பரசன் மிகச்சிறப்பாக பந்துவீசி 3 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறினார். அதோடு தன் முதல் 5 விக்கெட் சாதனையை தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் நிகழ்த்திக் காட்டினார்.
இந்தப் போட்டியில் பால்சி திருச்சி அணி தங்களின் 9 விக்கெட்களை சேப்பாக் சூப்பர் கில்லீஸின் ஸ்பின்னர்களிடம் இழந்தது. மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் குறைந்தபட்ச ஸ்கோரையும் இந்தப் போட்டியில் பதிவு செய்தனர். இதுவரை இந்த சீஸனில் விளையாடிய 6 போட்டிகளிலும் பால்சி திருச்சி அணி தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது.