கோவை : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரில் மதியம் 3 ம அளவில் நடந்த போட்டியில், நெல்லை, மதுரை அணிகள் மோதின. டாஸ் வென்ற சீகம் மதுரை பேந்தர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனர்கள் கார்த்திக் மற்றும் இந்த தொடரின் அனுபவ வீரரும் சீகம் மதுரை பேந்தர்ஸின் கேப்டனுமான சி. ஹரி நிஷாந்த் களமிறங்கினர்.
நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் ஐபிஎல் வெளிச்சம் பெற்ற சந்தீப் வாரியர் மற்றும் சோனு யாதவ் பவர்ப்ளேவில் தங்களின் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணியை திணறச் செய்தனர். இதில் ஓப்பனர் கார்த்திக் வெறும் 1 ரன்னில் சோனு யாதவ் வேகத்தில் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய தீபன் லிங்கேஷ் 6 ரன்களில் லக்ஷய் ஜெயின் பெளலிங்கில் விக்கெட்டை பறிகொடுத்தார்.நெல்லை ராயல் கிங்ஸ் முதல் 10 ஓவர்களில் அபாரமாக பந்துவீசி சீகம் மதுரை பேந்தர்ஸின் முக்கிய பேட்டர்களான ஹரி நிஷாந்த் மற்றும் வாஷிங்டன் சுந்தரை ரன் குவிக்க விடாமல் தடுத்தனர். வாஷிங்டன் சுந்தர்(19 ரன்கள்) ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து மோகன் பிரசாத் சுழலில் தனது விக்கெட்டை இழக்க, ஹரி நிஷாந்த மட்டும் தன் சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்து டி.என்.பி.எல் தொடரில் தனது 13வது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
அதன் பின்னர் சீகம் மதுரை பேந்தர்ஸின் பேட்டர்கள் பெரிதாக சோபிக்காமல் தங்களின் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெல்லை ராயல் கிங்ஸின் பெளலிங்கைப் பொறுத்தவரை இடது கை ஸ்பின்னரான மோகன் பிரசாத் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார். வேகப்பந்துவீச்சாளர்கள் சார்பில் சோனு யாதவ் மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.
நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது. ஓப்பனராக அவர்களின் கேப்டனும் மிஸ்டர்.டி.என்.பி.எல் என்று வர்ணிக்கப்படும் கே.பி அருண் கார்த்திக் ஒரு பக்கமும் இம்பாக்ட் வீரராக அதிரடி பேட்டர் ஸ்ரீ ரஞ்சன் மறுபக்கமும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அருண் கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த ஸ்ரீரஞ்சன் (15 ரன்கள்) ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் அருண் கார்த்திக் வெறும் 12 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து சீகம் மதுரை பேந்தர்ஸின் ராகுலின் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் முருகன் அஷ்வின் போன்ற ஐபிஎல் அனுபவமிக்க பெளலர்கள் இருந்தும் அவர்களால் நெல்லை ராயல் கிங்ஸின் முக்கிய விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை.
நெல்லை ராயல் கிங்ஸின் நிதிஷ் ராஜகோபால் வெறும் 26 பந்துகளில் 42* ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நெல்லை ராயல் கிங்ஸின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வெறும் 13.4 ஓவர்களில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.