சென்னை: 2024 தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயத்தை செய்தார் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த போட்டி மழையால் 7 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் துவக்க வீரராக களம் இறங்கினார் அஸ்வின். 7 ஓவர் போட்டி என்பதால் அனைவரும் அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்த நிலையில், அஸ்வின் எப்படி அதிரடியாக பேட்டிங் ஆடுவார்? அவர் துவக்க வீரராக இறங்கியதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்படும் என பலரும் எண்ணிய நிலையில், அதற்கு நேர்மாறான ஒரு விஷயம் நடந்தது.

அந்த அணியில் அஸ்வின் மட்டுமே அதிக ரன் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர். அந்த அணியில் சிவம் சிங், பூபதி குமார், பாபா இந்திரஜித், சரத் குமார் என நான்கு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். சுபோத் பாட்டி மூன்று ரன்னில் ஆட்டமிழந்தார். விமல் குமார் 12 ரன்கள் மட்டும் எடுத்தார். அஸ்வின் 20 பந்துகளில் 45 ரன்கள் குவித்து திண்டுக்கல் அணியை காப்பாற்றினார்.
ஒருவேளை அஸ்வினும் இந்த போட்டியில் பின்வரிசையில் பேட்டிங் இறங்கி இருந்தால், அந்த அணி படுமோசமான ஸ்கோரை மட்டுமே எடுத்து இருக்கும். அந்த வகையில் அஸ்வின் துவக்க வீரராக இறங்க வேண்டும் எடுத்த முடிவு, அந்த அணிக்கு சாதகமாகவே அமைந்தது. ஆனால், 7 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. 7 ஓவர் போட்டியில் இது மிக, மிக குறைந்த ஸ்கோர் என்பதால் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மகிழ்ச்சியுடன் இருந்தது.
அந்த அணி சேஸிங்கை 4.5 ஓவரில் எல்லாம் முடித்துவிட்டது. சேப்பாக் அணியின் துவக்க வீரர் சந்தோஷ் குமார் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருந்தார். எனினும், அடுத்து ஜெகதீசன் மற்றும் பாபா அபாரஜித் இணைந்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் தங்கள் அணியை வெற்றி பெற வைத்தனர். ஜெகதீசன் 14 பந்துகளில் 32 ரன்களும், பாபா அபாரஜித் 14 பந்துகளில் 31 ரன்களும் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது.