சென்னை : டிஎன்பிஎல் தொடருக்கான ஏலத்தில் நட்சத்திர வீரர் நடராஜன் மற்றும் சாய் கிஷோர் இருவரையும் பெரிய தொகை கொடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி வாங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் தொடர் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து வருகிறது. இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 8வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. கடந்த முறை முதல்முறையாக டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை 2வது முறையாக ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்கும் ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் 16 முதல் 20 வீரர்கள் வரையில் இடம்பெற வேண்டும். அதேபோல் ஒவ்வொரு அணிக்கும் ரூ.70 லட்சம் மட்டுமே தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் நட்சத்திர வீரர்களான சாய் கிஷோர், நடராஜன், சந்தீப் வாரியர், சஞ்சய் யாதவ், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜனை ரூ. 11.25 லட்சம் கொடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி வாங்கியுள்ளது. கடந்த முறை திருச்சி அணிக்காக ஆடிய நடராஜனை, இம்முறை பெரிய தொகை கொடுத்து திருப்பூர் அணி வாங்கியுள்ளது. அதேபோல் சாய் கிஷோரை வாங்குவதற்கு பல்வேறு அணிகளும் போட்டியிட்டன. இறுதியாக ரூ.22 லட்சம் கொடுத்து திருப்பூர் அணி வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கோவை அணி தரப்பில் சாய் சுதர்சன் ரூ.21.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது சாய் சுதர்சனின் சாதனை சாய் கிஷோர் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி சோலாஸ் அணி சார்பாக சஞ்சய் யாத ரூ.22 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரை காட்டிலும் தமிழக வீரர்கள் டிஎன்பிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு வருவது வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் வரும் நாட்களில் ஐபிஎல் தொடரிலும் தமிழக வீரர்களின் மதிப்பு உயரும் என்று பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் திண்டுக்கல் அணி சார்பாக அஸ்வின் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.