Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிஎன்பிஎல் 2025 டி20 தொடர் கோவையில் இன்று தொடக்கம்.. திண்டுக்கல் டிராகன்ஸ் Vs கோவை கிங்ஸ் மோதல்

கோவை: 8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று (ஜூன் 5) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ளன. அதிகபட்சமாக சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 4 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் பட்டம் வென்று இருக்கின்றன.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களது திறமையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் வலுவான அடித்தளமாக டி.என்.பி.எல் உள்ளது. இந்த தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு ஐபிஎல் கனவு நிறைவேறி வருகிறது.

வேகப் பந்துவீச்சாளர் நடராஜன், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் உள்ளிட்ட வீரர்கள் டி.என்.பி.எல் போட்டியில் அபாரமாக செயல்பட்டதால் ஐபிஎல் போட்டியில் அடியெடுத்து வைத்ததுடன், இந்திய அணியிலும் இடம் பெற்றனர்.

TNPL 2025 Begins Today in Coimbatore Dindigul Dragons vs Kovai Kings in Inaugural Match

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் தமிழகத்திலிருந்து சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் உட்பட 11 வீரர்கள் பல்வேறு அணிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்கள் டி.என்.பி.எல் தொடரில் இருந்து ஐபிஎல் தொடருக்கு சென்றவர்கள்.

இந்நிலையில், ஒன்பதாவது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த வாரங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஜூலை 6 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது.

இந்த சீசனின் முக்கிய அம்சமாக, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு அணிகள் முற்றிலும் புதிய தோற்றத்துடன் களம் இறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால், பல நட்சத்திர வீரர்கள் புதிய அணிக்கு சென்றுள்ளனர்.

வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கும், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஸ்வப்னில் சிங் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்காகவும், பேட்ஸ்மேன்கள் முகிலேஷ், சுரேஷ்குமார் ஆகியோர் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கும் விளையாட உள்ளனர்.

ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்க்கு திரும்பி இருக்கிறார். மேலும், ஷாருக்கான், சச்சின், அஸ்வின் சித்தார் இருவரும் கோவை கிங்ஸ், சாய் கிஷோர், நடராஜன் இருவரும் திருப்பூர் தமிழன்ஸ், சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி இருவரும் திண்டுக்கல் டிராகன்ஸ், முருகன் அஸ்வின் மதுரை பேந்தர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஆட இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான சாய் சுதர்சன், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்று இருப்பதால், இந்தப் போட்டியில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

நடப்பு டி.என்.பி.எல் கிரிக்கெட் முதல் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, இரண்டாவது இடம் பிடித்த கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியில் சச்சின், அஸ்வின் சித்தார், விஷால் வைத்யா, சித்தார்த் உள்ளிட்ட திறமையான வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி, பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர், பெரியசாமி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் திண்டுக்கல்லிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க கோவை அணி வரிந்து கட்டும். அதே நேரத்தில் ஆதிக்கத்தைத் தொடர திண்டுக்கல் டிராகன்ஸ் முனைப்பு காட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் திண்டுக்கல் 6 முறையும், கோவை 4 தடவையும் வென்றுள்ளன. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 17 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 50 லட்சம், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

Story first published: Thursday, June 5, 2025, 14:54 [IST]
Other articles published on Jun 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+