டிஎன்பில் சீசன் 3 இறுதி போட்டிக்கு முன்னேற போகும் இரண்டாவது அணி எது ?
சென்னை : டிஎன்பில் மூன்றாவது சீசன் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எதிர் நோக்கியுள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதி போட்டிக்கான இரண்டு அணிகளை தேர்ந்து எடுக்கும் குவாலிபையர் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால், கடந்த இரண்டு நாட்களில் நடக்க வேண்டிய டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. நேற்று குவாலிபையர் போட்டியும்,எலிமினேட்டர் போட்டியும் ஒரே நாளில் நடைபெற்றது.

நேற்று முதலாவது குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும்,சியச்செம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. இதில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
எலிமினேட்டர் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியும் காரைக்குடி காளை அணியும் மோதின. பரபரப்பான இப்போட்டியில் கோவை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதி பெற்றது. காரைக்குடி காளை அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணி,லைக்கா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியை எதிர் கொள்ளும்.
மதுரை மற்றும் கோவை அணிகள் இதற்கு முன்னால் லீக் சுற்றில் ஒருமுறை விளையாடியுள்ளது. அப்போது கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மதுரை அணிக்கு நேரம் சரியில்லை என்றே சொல்லவேண்டும். அந்த அணி லீக் போட்டிகளில் 5 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் கண்டது. ஆனால் தான் தோற்ற அணிகளுடனே மீண்டும் அந்த அணி குவாலிபையர் போட்டிகளில் சந்திக்கிறது. முதலில் நடந்த முதலாவது குவாலிபையரில் திண்டுக்கல் அணியுடன் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இன்று மீண்டும் கோவை அணியுடன் போட்டி.தோல்வியில் இருந்து மதுரை மீண்டு வருமா அல்லது கோவை அணி மீண்டும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Story first published: Friday, August 10, 2018, 15:42 [IST]
Other articles published on Aug 10, 2018


Click it and Unblock the Notifications