டி.என்.பி.எல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வாரியர்ஸை வென்றது சென்னை சூப்பர் கில்லீஸ் #TNPL
சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பில்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் காஞ்சி வாரியஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது.
முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சென்னை, நத்தம், நெல்லை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

மழையால் தாமதம்
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக காலதாமதமாக இப்போட்டி தொடங்கியது.

காஞ்சி தடுமாற்றம்
இதனால் போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற காஞ்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதல் இறுதி வரை காஞ்சி வாரியர்ஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

97 ரன்கள்
நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து காஞ்சி அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் தட்ஷிணா மூர்த்தி குமரன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடக்கத்தில் தடுமாற்றம்
இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் 98 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களான கோபிநாத் , தலைவன் சற்குணம் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அபார வெற்றி
இதனால் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த சத்திய மூர்த்தி சரவணன் மற்றும் ஜோதிமணி சுபாஷ் நிதான ஆட்டத்தை மேற்கொண்டனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. இறுதியில் சென்னை அணி 11.5 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

சத்தியமூர்த்தி சரவணன்
சத்திய மூர்த்தி சரவணன் அபாரமாக விளையாடி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் இறங்கிய ராஜகோபால் 2 சிக்ஸர்கள் விளாசி 17 ரன்கள் சேர்த்தார். சென்னை சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. அரைசதம் அடித்த மூர்த்தி சரவணன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications