கெத்து காட்டும் நம்ம ஊரு அணிகள்.. டிஎன்பிஎல் பிளே ஆப் போட்டிகள்.. நாளை துவங்குகின்றன!
சென்னை: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் போட்டிகள் இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளன. நாளை முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. 12ம் தேதி பைனல் போட்டி நடக்கிறது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. முதல் சீசனில் தூத்துக்குடியும், கடந்த சீசனில் சேப்பாக் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.
மூன்றாவது சீசனில் சாம்பியன் கோப்பையை வெல்வதற்கு 8 அணிகள் மோதின. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வென்று, தலா 10 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் திண்டுக்கல் மற்றும் மதுரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வி அடைந்த மதுரை, முதல் அணியாக பிளே ஆப் முன்னேறியது.

காரைக்குடி, கோவையும் நுழைந்தன
நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டங்களைத் தொடர்ந்து, கோவை, காரைக்குடி, திருச்சி, தூத்துக்குடி ஆகிய நான்கு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் இருந்தன. இதில் ரன் ரேட் அடிப்படையில் கோவை மற்றும் காரைக்குடி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. காஞ்சி மற்றும் சேப்பாக் அணிகள் 2 புள்ளிகளுடன் ஏற்கனவே வெளியேறின.

பிளே ஆப் ஆட்டம்
பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நாளை துவங்குகின்றன. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் நாளை நடக்கும் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடுகின்றன.

எலிமினேட்டர் போட்டி
8ம் தேதி நடக்கும் எலிமினேட்டரில் கோவை மற்றும் காரைக்குடி அணிகள் மோதுகின்றன. 10ம் தேதி நடக்கும் 2வது குவாலிபையர் ஆட்டத்தில் முதல் குவாலிபையரில் தோற்கும் அணியும் எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியும் மோதும்.

சேப்பாக்கத்தில் பைனல்
12ம் தேதி நடக்கும் பைனலில் முதல் மற்றும் 2வது குவாலிபையரில் வெற்றிபெறும் அணிகள் மோதும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பைனல் போட்டி நடக்கிறது. அனைத்து போட்டிகளும் இரவு 7.15க்கு துவங்குகிறது.


Click it and Unblock the Notifications