
கவனத்தை கவர்ந்த பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறார் இளம்புயல் பாபர் அசாம். 25 வயதான அசாம், 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி, 6,680 ரன்களை குவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டனை விட அவர் முன்னிலையில் உள்ளார்.

அடுத்த விராட் கோலி
விராட் கோலியை போல அதே ஸ்டைலை தன்னுடைய ஆட்டத்தில் பாபர் அசாம் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அதே வேகம், போட்டிகளை சமயோசிதமாக கையாண்டு ரன்களை குவிப்பது போன்ற விராட் கோலியின் திறமைகளை தன்னுள்ளே அவர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் அடுத்த விராட் கோலி என்றும் அவர் புகழப்படுகிறார்.

யூனிஸ் கான் விளக்கம்
இந்நிலையில், பாபர் அசாமையும் விராட் கோலியையும் தற்போது ஒப்பிடுவது தவறு என்ற முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டுவரும் விராட் கோலி, அனைத்துவிதமான சூழல்களிலும் சிறப்பாக செயல்படுபவர் என்றும் பாபர் அசாமைவிட மிகுந்த அனுபவமிக்கவர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

70 சதங்கள் அடித்து சாதனை
பாபர் அசாமிற்கும் விராட் கோலிக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் 5 வருடங்கள் வித்தியாசம் காணப்படுவதாகவும், கோலி தன்னை அனைத்துவிதத்திலும் நிரூபித்துள்ளார் என்றம் யூனிஸ் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடிப்பது சாதாரண விஷயமில்லை என்றும் அதை விராட் கோலி சாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எதிரணியினருக்கு எதிராக எந்த சூழலிலும் ரன்களை குவிப்பதிலும் அவர் வல்லவராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பேட்டிங் திறனில் முன்னேற்றம்
பாபர் அசாம் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி வந்தாலும் அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளதாகவும் யூனிஸ் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 3 வடிவங்களிலும் சிறந்த சராசரியை பெற்றுள்ளதையும் நாளுக்கு நாள் அவரது பேட்டிங் திறன் முன்னேறி வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











