ஐபிஎல் போட்டிகளில் அதிகம் 'கட்டைபோட்டு' கடுப்பேற்றிய டாப் 5 வீரர்கள்
மும்பை: ஐபிஎல் 7வது சீசனில் அதிகமாக பந்துகளை வீணாக்கி கட்டை போட்டு கடுப்பேற்றிய வீரர்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களில் பலரும் அந்தந்த அணிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர்கள்தான். இருப்பினும் 'டாட்' பால் எனப்படும் ரன் எடுக்காத பந்துகளின் எண்ணிக்கையில் இவர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் வருகிறார்கள்.

'டாட் பாலிலும்' சென்னை டாப்
பவுலர் வீசும் பந்தை, பேட்ஸ்மேன் அதன்போக்கில் செல்லவிட்டு விடுவது மட்டுமின்றி, அடிக்க முற்பட்டு பந்து அருகேயுள்ள பீல்டர் கையில் சிக்கி ரன் எடுக்க முடியாததுதான் டாட் பால் எனப்படும். அந்த வகையில், அதிக டாட் பால்களை சந்தித்த வித்தியாச பெருமையையும் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே பெற்றுள்ளது.

ஜவ்வு ஸ்மித்
அணியின் துவக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித் தடாலடி பேட்ஸ்மேன்தான் என்றாலும் ஜவ்வு போல இழுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.. ஸ்மித் மொத்தம் 188 பந்துகளில் ஒரு ரன்னும் எடுக்காமல் நின்றுள்ளார். இப்போது தெரிகிறதா? ஏன் சென்னை அணி பெரும்பாலும் கடைசி ஓவரிலேயே வெற்றி பெற்று வந்தது என்று. எல்லாம் பந்து பற்றாக்குறைதான் காரணம். இத்தனைக்கும் ஸ்மித்துதான் இந்த சீசனில் 34 சிக்சர் அடித்து அதிக சிக்சர் அடித்த 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றவர்.

அடிக்கவும் தெரியும், மடக்கவும் தெரியும்
அதிக பந்துகளை ரன் எடுக்காமல் மட்டை போட்ட பெருமையில் 2ம் இடத்தில் உள்ளவரும், ஐபிஎல் 7வது சீசனில் அதிக ரன் எடுத்தவரும் ஒருவரே. அவர் வேறு யாருமல்ல.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள கர்நாடகாவை சேர்ந்த ராபின் உத்தப்பா. இவர் 165 பந்துகளை ரன் எடுக்காமல் விட்டுள்ளார்.

பதில் சொல்லா பிள்ளை
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான். 141 பந்துகளுக்கு இவர் பதில் சொல்லவில்லை. பார்மில் இல்லாததும் இதற்கான ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கவுத்துட்டீங்களே மெக்கல்லம்
முதல் ஐந்து இடங்களில் மற்றொரு வீரரும் சென்னை அணிக்காரரே. அவர் அதிரடி (!) ஆட்டக்காரர் என்று கூறப்படும் பிரண்டன் மெக்கல்லம். 137 பந்துகளை அவர் ரன் எடுக்காமல் வீணாக்கியுள்ளார். முக்கியமான அரையிறுதியில் இவரின் மொக்கை ஆட்டம்தான் சென்னைக்கு பெரும் தலைவலியாக மாறியது.

சந்தித்ததே சாதனைதான்
சீசன் 7ல் ஒரே ஒரு மேட்சில் மட்டுமே அதிரடியாக விளையாடி ரன் குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆட்டக்காரர் வீரேந்திரசேவாக்தான் ஐந்தாவது இடம் பிடித்த அதிருஷ்டக்காரர். இவர் மொத்தம் 136 பந்துகளை பார்த்து பத்திரமாக கையாண்டு ரன் எடுக்காமல் விட்டுள்ளார். தற்போதைய பார்மில், இத்தனை பந்துகளை எதிர்கொண்டதே சேவாக்கின் சாதனைதான்.


Click it and Unblock the Notifications