பாருங்க... இந்த முறை இங்கிலாந்துக்கு தான் உலக கோப்பை..! கவாஸ்கர்... நீங்க இப்படி சொல்லலாமா?
மும்பை:உலக கோப்பை இந்த முறை இங்கிலாந்துக்கு தான் என்று அடித்துச் சொல்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர்.
வரும் 30ம் தேதி தொடங்கும் உலக கோப்பை தொடரை காண ரசிகர்கள் தயாராகி விட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கிட்டத் தட்ட அனைத்து அணிகளும் உலக கோப்பைக்கான அணியை அறிவித்துவிட்டன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதற்கு காரணம்... கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வருகிறது.

பார்மில் இந்திய அணி
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. பும்ரா, புவனேஷ்வர் குமார், சமி ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். டாப் ஆர்டரும் கலக்கலாக உள்ளது. அதேபோல இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஒரு நாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது.

இங்கிலாந்து சாம்பியன்
ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழ்ந்து வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான கவாஸ்கரின் கணிப்போ வேறு மாதிரி இருக்கிறது. இந்த முறை இங்கிலாந்து தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்கிறார்.

வீரர்கள் நம்பிக்கை
அவர் மேலும் கூறியிருப்பதாவது:கடந்த உலக கோப்பையில் படுமோசமாக வெளியேறிய இங்கிலாந்து, தற்போது அற்புதமாக ஆடிவருகிறது. அந்த அணியில் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இங்கிலாந்து அணி அண்மைக்காலத்தில் ஆடிய போட்டிகளை பார்த்தோமேயானால் அவர்கள் அபாரமாகவும், தன்னம்பிக்கையுடனும் ஆடுவது தெரியும்.

எதுவும் நடக்கலாம்
2011 மற்றும் 2015 ஆகிய உலக கோப்பைகளை, தொடரை நடத்திய நாட்டின் அணிதான் வென்றது. அந்த வகையில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடரை இங்கிலாந்து வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது. கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மற்ற அணிகளும் வலுவாகவே உள்ளன. எனினும் இந்த உலக கோப்பையை இங்கிலாந்து தான் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications