"விராட் கோலியுடன் சமாதானமாக போக எதுவுமில்லை".. டிராவிஸ் ஹெட் ஓபன் டாக்.. ஐபிஎல் மோதல் பின்னணி
சிட்னி: 2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, தமக்கு கை கொடுக்காமல் விராட் கோலி தவிர்த்துச் சென்ற சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்த போது டிராவிஸ் ஹெட் அவருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை கொடுக்கும் நிகழ்வின் போது, டிராவிஸ் ஹெட்டை முற்றிலும் புறக்கணித்து அவருக்குக் கை கொடுக்காமல் விராட் கோலி கடந்து சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்களில் விராட் கோலி ரசிகர்கள் டிராவிஸ் ஹெட் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் வரை திட்டித் தீர்த்தனர். அப்போது முதல் டிராவிஸ் ஹெட் - விராட் கோலி இடையே பகை இருப்பது போன்ற பிம்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை குறித்துக் கோட் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த டிராவிஸ் ஹெட், "இதில் சமாதானமாகப் போவதற்கு எதுவுமில்லை. என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. போட்டி நடைபெறும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று மிகவும் நிதானமாகப் பதிலளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெசிகா டேவிஸ் சமூக வலைதளங்களில் விராட் கோலி ரசிகர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டார். மோசமான வார்த்தைகளாலும், மிரட்டல்கள் விடுத்தும் அவரது சமூக வலைதள பக்கங்களில் கோலி ரசிகர்கள் எல்லை மீறினர்.
இது குறித்துப் பேசிய ஹெட், "விளையாட்டு உலகில் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்வது இயல்பு தான். எனது மனைவி ஜெசிகா இதனை மிக முதிர்ச்சியுடன் கையாண்டார். ஆனால், பொதுவெளியின் வெளிச்சத்திற்குப் பழக்கப்படாத எங்கள் குடும்பத்தினருக்கு இந்தச் சம்பவம் சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களில் மக்கள் இதையெல்லாம் மறந்து விடுவார்கள்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
