டெல்லி: ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. டோட்டல் ரிலாக்ஸ்.. இதுதான் இப்போதைக்கு கேப்டன் டோணியின் ஒரே திட்டம்.. இந்தியா, பாகிஸ்தான், உலகக் கோப்பை, போட்டி என்பதையெல்லாம் மறந்து விட்டு தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் தீவிர முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் டோணி.
மீன்பிடிப்பது, டிரக்கிங், படகு சவாரி என்று மனதையும், உடலையும் முழுமையாக ரிலாக்ஸ் ஆக்கிக் கொண்டிருக்கிறார் டோணி. கிரிக்கெட்டையே சுத்தமாக, தற்காலிகமாக மறந்து விட்டு ரிலாக்ஸ்டாக இருந்து வருகிறார் டோணி.
அடிலைட் அருகே உள்ள ஒரு அட்வன்ச்சர் பூங்காவுக்கு அவரும் அவரது சகாக்கள் புவனேஷ் குமார், இஷாந்த் சர்மா, மொஹித் சர்மா ஆகியோரும் சென்று முழுமையாக நேரத்தை செலவிட்டுள்ளனர்.

இது ஒரு இரண்டு நாள் டிரக்கிங் மற்றும் பிஷிங் டிரிப் ஆகும். இதில் புவனேஷ் குமாரும், இஷாந்த்தும் காயமடைந்துள்ளனர். ஸ்டேண்ட் பை வேகப் பந்து வீச்சாளராக இருப்பவர் மொஹித் சர்மா.
இந்தப் பூங்காவானது அடிலைடிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாம். இது சாகச விளையாட்டுப் பூங்காவாகும். இங்கு டிரக்கிங், மீன்பிடிப்பது, படகு சவாரி என பலவும் உள்ளன. இங்கு 2 நாட்கள் டோணியும் மற்றவர்களும் இருப்பார்களாம். நேற்று கிளம்பிப் போன அவர்கள் நாளைதான் தாங்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்குத் திரும்புவார்கள்.
இதற்கிடையே, ஸ்டூவர்ட் பின்னி தனது மூத்த சகோதரியைப் பார்க்க சிட்னி போயுள்ளார். ஷிகர் தவான் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க மெல்போர்ன் போயுள்ளார். மற்றவர்கள் ஹோட்டலிலேயே தங்கி ஜாலியாக பொழுதைக் கழித்து வருகின்றனர். ஜிம்முக்கும் போனார்களாம். சிலர் ஷாப்பிங் போயுள்ளனர்.