ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்.. அடுத்த ஆண்டு முதல் டிரிபிள் விருந்து வழங்கும் ஐசிசி
மும்பை: ஐசிசி அடுத்த சர்வதேச கிரிக்கெட் காலண்டரில் முத்தரப்பு தொடர்களை மீண்டும் கொண்டு வர தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் முத்தரப்பு மற்றும் நான்கு நாடுகள் பங்கேற்கும் தொடர்கள் மீண்டும் முக்கியத்துவம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலத்தைப் போலல்லாமல், தற்காலத்தில் முத்தரப்பு மற்றும் நான்கு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் காலண்டரில் அரிதான ஒன்றாக மாறிவிட்டன. இந்தியா கடைசியாக 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முத்தரப்பு தொடரில் மட்டுமே விளையாடியது.

இருதரப்பு தொடர்கள் நிதி ரீதியாக கிரிக்கெட் வாரியங்களுக்கு லாபகரமாக இல்லாததாலும், ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதாலும், ஐசிசி இத்தகைய முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. பல அணிகள் பங்கேற்கும் தொடர்கள் ரசிகர்களை ஈர்ப்பதுடன், சிறந்த வருவாயையும் ஈட்டித் தரும் என்று ஐசிசி நம்புகிறது.
2019 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, ஒரே ஒரு ஒருநாள் முத்தரப்பு தொடர் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்றன. தற்போது, நமிபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்கும் டி20 முத்தரப்பு தொடர் மட்டுமே அட்டவணையில் இடம்பிடித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சேனா (SENA - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் பயிற்சி பெறவும் தேவையான கால அவகாசம் கிடைக்கும் வகையில் அடுத்த எஃப்டிபிகாலண்டரை திட்டமிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "தற்போது வீரர்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருவதே எங்களது முக்கிய சவாலாக உள்ளது. எனவே, அடுத்த எஃப்டிபி திட்டமிடலில் சில அவசியமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க உள்ளோம். வீரர்கள் தகுந்த ஓய்வு பெறுவதையும், சேனா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகளில் விளையாடி அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தயாராவதையும் உறுதி செய்யும் வகையில் எஃப்டிபி அட்டவணை அமைய வேண்டும் என்று எங்கள் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறினார்.
இந்திய அணி 2026-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்கா செல்லவும் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடர் 2028-29-ஆம் ஆண்டிலும், ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடருக்காக 2029 கோடை காலத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


