PAK vs SA- பட்டையை கிளப்பிய பங்காளிகள்.. 353 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான்
கராச்சி: முத்தரப்பு ஒரு நாள் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார சாதனையை படைத்தது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்குபெறும் முத்தரப்பு தொடர் நடைபெற்றது.
இதில் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் ஏற்பட்டது. இந்த சூழலில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் கேப்டன் பவுமா 82 ரன்களும், மேத்யூ பிரிட்ஸ்கே 83 ரன்கள் எடுத்தனர். இதேபோன்று இறுதியில் கெயில் வெர்ரையன் 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் கதி அவ்வளவுதான் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 23 ரன்களிலும், பக்கர் ஜமான் 41 ரன்களும், சவுத் சக்கில் 15 ரன்களும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 91 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். அபாரமாக விளையாடிய ரிஸ்வான் 128 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதேபோன்று சல்மான் ஆகா 16 பௌண்டரி, 2 சிக்சர் என 103 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 260 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி இவளோ பெரிய இலக்கை துரத்தி இருப்பது அந்த அணியின் பேட்டிங் பவரை காட்டி இருக்கிறது. இதன் மூலம் முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications