தோனியின் ட்விட்டர் ப்ளூ டிக் திடீரென நீக்கம்... கொந்தளித்த ரசிகர்கள்.. காரணம் என்ன?
மும்பை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தை தனக்கென வைத்திருப்பவர் இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் தோனி.
எம்.எஸ்.தோனி தற்போது பெரியளவில் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை என்றாலும் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற அப்டேட்டை ரசிகர்கள் இணையத்தில் தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

தோனியின் ட்விட்டர் கணக்கு
உலகின் தலைசிறந்த கேப்டனாக விளங்கி வந்த தோனி, தான் அறிமுகமானது முதல் ஓய்வு பெறும் வரை சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக வலம் வந்தவர். தோனி, கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக போட்ட ட்வீட்கள் இன்று ரசிகர்களால் நினைவுக்கூரப்பட்டு வருகிறது. ஏனென்றால் தோனி கேலி, கிண்டல் என சுவாரஸ்யமான முறையில் ட்வீட்களை பதிவிடுவார்.

பதிவுகளே இல்லை
இப்படி போட்டிகள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கலக்கி வந்த எம்.எஸ்.தோனி கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவித பதிவுகளையும் போடவில்லை. தோனி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போதுவரை ஓரளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த தோனி, ஓய்வு அறிவித்த பிறகு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி ஜாலியாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தோனியின் அப்டேட்ஸ்
தோனி என்னதான் செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி அவரது மனைவி ஷாக்ஷி தோனி தான் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பகிர்வார். சமீபத்தில் தோனி புதுக் குதிரை வாங்கியதைக்கூட, சாக்ஷி தோனிதான் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

ப்ளூ டிக் நீக்கம்
இந்நிலையில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த தோனியின் ட்விட்டர் கணக்கில், ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. பிரபலங்களின் பெயர்களில் பல போலிக்கணக்குள் உலா வருவதால், உறுதிசெய்யப்பட்ட ( Verified) கணக்கு என்பதை குறிப்பதற்காக ப்ளூ டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. அது தற்போது தோனியின் கணக்கில் இருந்து நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

ரசிகர்கள் கோபம்
தோனியை 8.20 மில்லியன் பேர் ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் பதிவுகள் எதுவும் போடவில்லை என்றாலும், அவரின் பதிவுக்காக அவர்கள் காத்துள்ளனர். தோனி கடைசியாக கடந்த ஜனவரி 8-ஆம் தேதியன்று ட்வீட் செய்துள்ளார். அதன்பிறகு அவர் ட்வீட் ஏதும் பகிரவில்லை. இந்நிலையில் ப்ளூ டிக்கை நீக்கியிருப்பதால் ட்விட்டர் நிறுவனத்தின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

ட்விட்டர் விதிமுறை
பிரபலங்கள், தங்களின் ட்விட்டர் கணக்கை ஓராண்டுக்கு மேல் பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக், உடனடியாக நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து எம்.எஸ்.தோனியின் ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது. எனினும் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள் என்பதால் மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்படும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications