யு19 ஆசியக் கோப்பை 2024.. இந்திய அணியில் 13 வயது சிறுவனுக்கு வாய்ப்பு.. யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
மும்பை: யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் இன்னும் 2 வாரங்களில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 13 வயதே ஆகும் சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி என்பவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யு19 ஆசியக் கோப்பை தொடர் வரும் 29ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகள் ஒரு குரூப்பாகவும், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் ஒரு குரூப்பாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பங்காளிகளான பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணிக்கு இந்திய இளம் வீரர் முகமது அமான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக கிரண் சோர்மலே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய யு19 அணிக்கு தலைமை தாங்கினர். அதேபோல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடி வரும் 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை சிஎஸ்கே அணி நேரில் பார்ப்பதற்காக ட்ரையல்ஸ்-க்கு அழைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 13 வயதாகும் பீகாரைச் சேர்ந்த சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியும் இந்திய யு19 அணியில் தேர்வாகி உள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா 19 அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 3 இன்னிங்ஸ்களில் விளையாடி 108 ரன்களை விளாசினார்.
தற்போது இவர் பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் பீகார் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். இதனால் பலரும் வைபவ் சூர்யவன்ஷியும் சாதனையை பாராட்டி வருகின்றனர். ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்து வரும் யு19 உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய யு19 அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, ஆன்ட்ரே சித்தார்த், முகமது அமான், கிரன் சோர்மாலே, பிரனவ் பண்ட், ஹர்வன்ஷ் சிங், அனுராஜ் கவ்ரே, ஹர்திக் ராஜ், முகமது எனான், கார்த்திகேயே, யுதஜித் குஹா, சேட்டன் ஷர்மா, நிகில் குமார், சமத் நாகராஜ்,
ரிசர்வ் வீரர்கள்: சாஹில் பரக், நமன் புஷ்பல், பிரனவ் ராகவேந்திரா, திபேஷ், அன்மோஜித் சிங்


Click it and Unblock the Notifications