U19 ஆசிய கோப்பை: 50 ஓவர் போட்டியில் இந்திய வீரர் அபிக்யான் இரட்டை சதம்.. 408 ரன்கள் குவிப்பு
துபாய்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வீரர் அபிக்யான் இரட்டை சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். துபாயில் மலேசியாவுக்கு எதிராக, அண்டர் 19 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் மற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோரிச் வான் ஷால்க்விக் மட்டுமே இதற்கு முன் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். குழு ஏ பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அபிக்யான் 125 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் அவுட்டாகாமல் 209 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது அபார ஆட்டத்தால், இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 408 ரன்களை எட்டியது.

409 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய மலேசிய அணி 93 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அண்டர் 19 அணி 315 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இளையோர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் அபிக்யான் முறியடித்தார். 2002இல் இங்கிலாந்துக்கு எதிராக அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல் எடுத்த 177 ரன்களே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது 17 வயதான அபிக்யான் அதனை முறியடித்துள்ளார்.
இளையோர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள் பட்டியல்: ஜோரிச் வான் ஷால்க்விக் (தென் ஆப்பிரிக்கா) 215*, அபிக்யான் (இந்தியா) 209*, ஹஷிதா போயகொட (இலங்கை) 191, ஜேக்கப் பூலா (நியூசிலாந்து) 180, தியோ டோரோபௌலஸ் (ஆஸ்திரேலியா) 179*, அம்பதி ராயுடு (இந்தியா) 177*, டொனோவன் பாகன் (மேற்கிந்தியத் தீவுகள்) 176, டான் லாரன்ஸ் (இங்கிலாந்து) 174.
சதத்திற்குப் பிறகு பேசிய அபிக்யான் , அடுத்த நாக் அவுட் சுற்றுகளிலும் இந்த ஆட்டத்தை தொடர விரும்புவதாகத் தெரிவித்தார். அவர், "அடுத்தடுத்த சுற்றுகளுக்கு நாம் நகரும்போது, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவதே எனது ஒரே நோக்கமாக இருக்கும். அதுவே எனது சிந்தனையாக இருக்கும்," என்று கூறினார்.
அம்பதி ராயுடுவின் சாதனையை முறியடித்தது குறித்து, "ஒரு சாதனையை நிகழ்த்தியது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இனி பெரிய மேடைகளில் எனது சொந்த சாதனையை முறியடிக்க முயற்சிப்பேன்," என்று அபிக்யான் நம்பிக்கை தெரிவித்தார்.
"இந்த விக்கெட் நன்றாக இருந்தது, பந்தின் வேகமும், பவுன்ஸும் சிறப்பாக இருந்தது என்று என் மனதில் ஓடிய ஒரே எண்ணம். சுமார் 45 ஓவர்கள் வரை களத்தில் நின்றால், ரன்கள் தானாகவே வரும். அவர்களுக்கு தளர்வான பந்துகளை வீச வேண்டிய கட்டாயம் ஏற்படும்," என்றார்.
அவர் தொடர்ந்து, "ஆட்டத்தை மெதுவாக கட்டமைக்க வேண்டும். தேவைப்படும்போது கியர்களை மாற்றி, எந்த நேரத்திலும் அதிரடியைத் தொடங்க எனக்குப் பக்குவம் உள்ளது. களத்தில் நிலைத்து நிற்பதில் எனது கவனம் இருந்தது," என்று அபிக்யான் குண்டு விளக்கினார்.


Click it and Unblock the Notifications