U19 Asia cup: 56 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம்.. 9 சிக்சர், 5 பவுண்டரி.. 14 வயதில் மீண்டும் அபாரம்
துபாய்: 19 வயது உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை துபாயில் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி U19, யுஏஇ U19 அணியை எதிர்கொண்டது. துபாய் ஐசிசி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டனாக சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சியும் களமிறங்கினார். இந்த ஜோடி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஆயுஷ் மாத்ரே 11 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒரு பவுண்டரி மற்றும் அடித்து 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு வைபவ் சூரியவன்சியுடன் ஆரோன் ஜார்ஜ் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் ஆரோன் ஜார்ஜ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி, தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸர், பவுண்டரி என அவர் பறக்க விட்டார்.
இதன் காரணமாக இந்திய அண்டர் 19 அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் வைபவ் சூர்யவன்சியை கட்டுப்படுத்த முடியாமல் யுஏஇ அணி தடுமாறியது. 30 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த வைபவ் சூரியவன்சி, 56 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒன்பது இமாலய சிக்சர்களும் அடங்கும்.
இதனால் இந்திய அண்டர் 19 அணி 19 ஓவர் முடிவில் எல்லாம் 150 ரன்கள் கடந்தது. மறுபுறம் ஆரோன் ஜார்ஜ் 57 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். நடப்பாண்டில் மட்டும் அவர் அடித்திருக்கும் 6வது சதம் இதுவாகும். இதில் ஐந்து பௌண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். தொடர்ந்து வைபவ் சூர்யவன்சி அதிரடி காட்டி வந்ததால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் 95 பந்துகளில் 171 ரன்களை அவர் குவித்தார். இதில் 14 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்த போட்டிகள் அனைத்தும் சோனி லைவ் ஆப்பில் நேரலையில் காணலாம். வைபவ் சூர்யவன்சி டி20 போட்டியில் மட்டுமல்லாமல், ஒரு நாள், டெஸ்ட் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி வருவதால் அவரை விரைவில் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications