Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK U19: பைனலில் பாகிஸ்தான் மெகா வெற்றி.. இந்திய இளம் அணி செய்த சொதப்பல்.. என்ன நடந்தது?

துபாய்: 2025 ஆசிய கோப்பை அண்டர்-19 இறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணி பாகிஸ்தானிடம் படுதோல்வியைச் சந்தித்தது. துபாயில் நடந்த இந்த இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை பறிகொடுத்தது இந்தியா.

இந்தப் போட்டியில் டாஸ் வென்றது மட்டுமே இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. மற்றபடி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் அணியே முழு ஆதிக்கம் செலுத்தியது.

ind-pak-u19-
Photo Credit:

ஆட்டத்தை மாற்றிய சமீர் மின்ஹாஸ்

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், சமீர் மின்ஹாஸ் பெரிய அளவில் ரன் குவித்தார். இந்திய வீரர்களை மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்ட அவர், 113 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் 172 ரன்கள் குவித்து தனி ஆளாக மிரட்டினார்.

அவருக்குத் துணையாக அகமது ஹுசைன் 56 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. இந்தியத் தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 83 ரன்களை வாரி வழங்கினார்.

கிலான் பட்டேல் மட்டுமே சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 44 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்து இருந்தனர்.

348 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் அளித்தார். 10 பந்துகளில் 3 சிக்ஸர் உட்பட 26 ரன்கள் விளாசிய அவர், அவசரப்பட்டு தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். அவர் வெளியேறிய பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசை அப்படியே ஆட்டம் கண்டது.

கேப்டன் ஆயுஷ் மத்ரே 2 ரன்கள், ஆரோன் ஜார்ஜ் 16 ரன்கள், விஹான் மல்ஹோத்ரா 7 ரன்கள் என முக்கிய வீரர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இதனால் 9.5 ஓவரில் 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தோல்வியின் விளிம்பிற்குச் சென்றது.

தீபேஷ் ஆறுதல்

கடைசி கட்டத்தில் பந்துவீச்சாளர் தீபேஷ் தேவேந்திரன் பேட்டிங்கில் அதிரடி காட்டினார். வெறும் 16 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் விளாசி ரசிகர்களுக்குச் சற்று ஆறுதல் அளித்தார். ஆனால் அவரது ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் 150 ரன்களை தாண்டியது மட்டுமே ஆறுதலாக இருந்தது. இந்திய அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

பாகிஸ்தான் சாம்பியன்

இறுதியில் 26.2 ஓவர்களில் இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அலி ரசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 191 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற பாகிஸ்தான், 2025 அண்டர் 19 ஆசிய கோப்பையை வென்றது. லீக் சுற்றுகளில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, முக்கியமான இறுதிப்போட்டியில் இப்படிச் சரணடைந்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.

Story first published: Sunday, December 21, 2025, 17:23 [IST]
Other articles published on Dec 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+