U19 IND vs PAK Final: வைபவ் சூர்யவன்ஷி செய்த செயல்.. அவுட்டானவுடன் பாகிஸ்தான் வீரருடன் வம்பு
துபாய்: 19 வயதுக்குட்பட்டோருக்கான 2025 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பாகிஸ்தான் பந்துவீச்சாளரிடம் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவுட் ஆன கடுப்பில் அவர் தனது காலை சுட்டிக்காட்டி செய்த சைகை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
சிலர் பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த பதிலடி என இதை கொண்டாடினாலும், 14 வயது இளம் சிறுவன் என்பதோடு தவறு செய்து ஆட்டமிழந்த பின் கோபத்தை காட்டுவது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன நடந்தது?

துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் குவிக்க, இந்தியா 156 ரன்களில் சுருண்டு 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி சேஸிங் செய்த போது, ஆட்டத்தின் 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அலி ராசா வீசினார். அந்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் என பறக்கவிட்டார்.
ஆனால், அதே ஓவரில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க முயன்று வைபவ் 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். விக்கெட் விழுந்த உற்சாகத்தில் பந்துவீச்சாளர் அலி ராசா, வைபவ் சூர்யவன்ஷிக்கு மிக அருகில் சென்று, அவர் முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது வைபவ்விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
காலை காட்டிய வைபவ்:
பெவிலியன் திரும்பும் போது கடுப்பான வைபவ் சூர்யவன்ஷி, அலி ராசாவை பார்த்து முறைத்தபடியே, திடீரென தனது காலை கையால் சுட்டிக்காட்டி ஏதோ சைகை செய்தார். "என் காலில் இருக்கும் ஷூ.." என்பது போல அவர் சைகை செய்தது கேமராவில் தெளிவாக பதிவானது.
மைதானத்தில் அவுட் ஆகி வெளியேறும் போது, எதிரணி வீரரை பார்த்து காலைத் தூக்கி காண்பித்து, ஷூவை சுட்டிக்காட்டி வம்பிழுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது. சிலர் பாகிஸ்தான் வீரர் செய்கைக்கு பதிலடி கொடுத்தார் எனவும், சிலரோ, "வெறும் 14 வயது தான் ஆகிறது.. திறமையான வீரர் தான். ஆனால் களத்தில் இப்படியா நடந்து கொள்வது? அவுட் ஆனால் அமைதியாக வெளியேற வேண்டியதுதானே.. இதெல்லாம் தேவையா?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி போன்ற ஜாம்பவான்களை முன்னுதாரணமாக கொண்டு வைபவ் சூர்யவன்ஷி களத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே அவரை எதிர்கால இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக பார்க்கும் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.


Click it and Unblock the Notifications