U19 Asia cup -நேபாளத்தை 52 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..13 ரன் கொடுத்து 7 விக்கெட் எடுத்த இந்தியர்
துபாய் : 19 வயதுக்குட்பட்டவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் தோல்வியை தழுவிய நிலையில் இன்று வெற்றி பெற வேண்டிய உத்வேகத்துடன் நேபாளை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய நேபாள் அணி, வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி திரும்பினார்கள். இந்திய அணியின் பந்துவீச்சை கொஞ்சம் கூட எதிர்கொள்ள முடியாமல் நேபாள் வீரர்கள் தடுமாறினர்.

குறிப்பாக இந்திய அணியின் ராஜ் லிம்பானி என்ற வீரர் ஆக்ரோஷமாக பந்து வீசி கடும் நெருக்கடிகளை கொடுத்தார். ராஜ் லிம்பானியின் பந்தை தொட கூட முடியாமல் நேபாள் வீரர்கள் தேர்வில் விடை தெரியாத குழந்தை போல் முழிக்க தொடங்கினர். லிம்பானி நேபாள் வீரர்களுக்கு பிரச்சனைகளை கொடுத்தார். அந்த அணியின் 11 வீரர்களுமே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஒருவர் கூட பத்து ரன்களை தொடவில்லை. அதிகபட்சமாக நேபாள் அணியின் ஹேமாத் என்ற வீரர் 8 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நேபாள் அணி 22.1 ஓவரில் 52 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இந்திய அணி Wide ஆக 12 ரன்களையும் நோபாளாக 1 ரன்னும் சேர்த்து 13 கூடுதல் ரன்களை கொடுத்திருக்கிறது. இந்திய பந்துவீச்சு தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி 9.1 ஓவர் வீசி 13 ரன்களை விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேபோன்று ஆராத்யா சுக்லா என்ற வீரர் 31 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனை அடுத்து 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அண்டர் 19 அணி தொடக்க வீரர்கள்களமிறங்கினர். இதில் ஆர்ஷின் குல்கர்னி 43 ரன்களும், ஆதர்ஷ் சிங் 13 ரன்களும் எடுக்க இந்திய அணி 7.1வது ஓவரில் தான் வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. . குரூப் ஏ வில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தற்போது விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, December 12, 2023, 14:17 [IST]
Other articles published on Dec 12, 2023


Click it and Unblock the Notifications