துபாய்: 2025 ஆசிய கோப்பை அண்டர்-19 அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. இந்த ஒருநாள் போட்டி மழையால் ஓவர்கள் குறைந்து 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்து தடுமாறினாலும், ஆரோன் ஜார்ஜ் மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா எளிதாக வெற்றி வாகை சூடியது.
துபாயில் நடைபெற்ற இந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய பவுலர்களின் துல்லியமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

கேப்டன் விமத் தின்சரா 32 ரன்களும், சமிக ஹீனதிகலா 42 ரன்களும் எடுத்து சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியத் தரப்பில் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சௌஹான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஆயுஷ் மத்ரே 7 ரன்களிலும், அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவருமே ரசித் நிம்சரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். 25 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இந்தியா சற்று தடுமாறியது.
"தொடக்க வீரர்கள் போனா என்ன? நாங்க இருக்கோம்ல" என்று களத்தில் நங்கூரம் போட்டனர் ஆரோன் ஜார்ஜ் மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஜோடி. ஆரம்பத்தில் நிதானம் காட்டிய இவர்கள், நேரம் செல்லச் செல்ல இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
விஹான் மல்ஹோத்ரா 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அவர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து இருந்தார். ஆரோன் ஜார்ஜ் 49 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து இருந்தார்.
இந்த ஜோடி பிரிக்க முடியாத 3வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் 18 ஓவர்களிலேயே 139 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அண்டர்-19 அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் - வங்கதேசம் மோதின. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் அண்டர் 19 அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளன.