யு19 உலககோப்பை.. இந்திய அணியை கோர்த்துவிட்ட ஐசிசி.. வெளியானது முழு அட்டவணை.. சரியான சம்பவம் இருக்கு!
மும்பை: யு19 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் மற்றும் அட்டவணை தொடர்பான அனைத்து விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவுள்ளது. முன்னதாக இலங்கை யு19 உலகக்கோப்பை தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தின் போது இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால், உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு யு19 உலகக்கோப்பை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள யு19 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை மற்றும் 4 குரூப்களில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி யு19 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 16 அணிகள் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அந்த குரூப்பில் வலிமையான வங்கதேசம், அயர்லாந்து மற்றும அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்த யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 குரூப்-களில் இருந்து தலா 3 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 6 சுற்றுக்கு பின் அரையிறுதி மற்றும் இறுதி சுற்று நடக்கவுள்ளது. பிப்.6 மற்றும் பிப்.8 ஆகிய தேதிகளில் அரையிறுதி சுற்றும், பிப்.11ஆம் தேதி இறுதிச்சுற்றும் நடக்கவுள்ளது. அதேபோல் அந்த 3 நாட்களுக்கும் ரிசர்வ் நாள் இருக்கும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை ஜனவரி 20ல் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
அதேபோல் ஜன்வரி 25ல் அயர்லாந்து அணியையும், ஜனவரி 28ல் அமெரிக்கா அணியையும் எதிர்த்து விளையாடவுள்ளது. அதேபோல் மொத்தமாக 41 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதற்காக 5 மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக யு19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் உடனடியாக சீனியர் அணியில் இடம்பிடிப்பார்கள் என்பதால், இந்த தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications