புலவாயோ: இந்தியாவின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. 2026 அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அபார ஆட்டம் ஆடி, கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் சாதனையை முறியடித்து, புதிய சரித்திரத்தை எழுதியுள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் ஆன வைபவ் சூர்யவன்ஷி கடந்த சில மாதங்களாக அண்டர் 19 மற்றும் யூத் பிரிவு போட்டிகளில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறார். இந்த நிலையில் அண்டர் 19 உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் பல சாதனைகளைத் தவிடு பொடியாக்கியுள்ளார்.

ஜிம்பாப்வேயின் புலவாயோவில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற குரூப் 'ஏ' போட்டியில், இந்தியாவின் டாப் ஆர்டர் தடுமாறியபோது களத்தில் நங்கூரமாய் நின்றார் வைபவ். 67 பந்துகளைச் சந்தித்த அவர், 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம், யு-19 உலகக்கோப்பை வரலாற்றில் அரைசதம் (50+) அடித்த உலகின் மிக இளம் வயது வீரர் (14 வயது மற்றும் 296 நாட்கள்) என்ற பிரம்மாண்ட சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். 15 வயதைக் கடப்பதற்கு முன்னரே உலகக்கோப்பையில் அரைசதம் அடித்த முதல் வீரர் இவர்தான்.
வைபவ் சூர்யவன்ஷி செய்த சாதனை இதோடு நிற்கவில்லை. யூத் ஒருநாள் போட்டிகளில் (Youth ODIs) அதிக ரன்கள் குவித்த இந்தியர்களின் பட்டியலில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
விராட் கோலி யு-19 போட்டிகளில் 28 ஆட்டங்களில் 978 ரன்கள் எடுத்திருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி: தனது 20-வது போட்டியிலேயே 1000 ரன்களைக் கடந்து, தற்போது 1047 ரன்களுடன் கோலியை முந்தியுள்ளார்.
யூத் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் வைபவ் பெற்றுள்ளார்.
சுப்மன் கில் - 13 இன்னிங்ஸ்
உன்முக் சந்த் - 17 இன்னிங்ஸ்
வைபவ் சூர்யவன்ஷி - 20 இன்னிங்ஸ்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 22 இன்னிங்ஸ்
யூத் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய 7-வது இந்திய வீரர் வைபவ் ஆவார். விஜய் ஜோல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தன்மய் ஸ்ரீவஸ்தவா, சுப்மன் கில், உன்முக் சந்த், சர்பராஸ் கான் ஆகியோருக்குப் பிறகு இந்தப் பட்டியலில் வைபவ் இணைந்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுக்கு எதிரான போட்டியின் போதே வைபவ் ஒரு சாதனையைப் படைத்திருந்தார். யு-19 உலகக்கோப்பையில் விளையாடிய மிக இளம் வயது வீரர் (14 வயது, 294 நாட்கள்) என்ற கனடா வீரர் நிதிஷ் குமாரின் சாதனையை முறியடித்தார். அமெரிக்காவுக்கு எதிராக பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்றாலும், ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 14 வயதிலேயே உலக அரங்கில் இப்படி ஒரு முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் வைபவ், விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.