புலவாயோ : ஐசிசி யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) அனல் பறக்கும் ஆட்டம் காத்திருக்கிறது. குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணியும், அஜிசுல் ஹக்கீம் தமிம் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த சில நாட்களாக இந்தியா - வங்கதேச நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் சார்ந்து பல்வேறு சர்ச்சைகள் நடந்து வரும் நிலையில் இந்த அண்டர் 19 மோதல் நடைபெற உள்ளது.
நடப்பு அன்ற 19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை மிக எளிதாக வீழ்த்தித் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. மழை குறுக்கிட்ட நிலையில், அந்தப் போட்டியில் அமெரிக்காவை 107 ரன்களுக்குச் சுருட்டியது இந்தியா.

சுழற்பந்து வீச்சாளர் ஹெனில் படேல் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளி மிரட்டினார். பேட்டிங்கில் அபிஞான் குண்டு (42*) மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
வங்கதேச அணியைச் சாதாரணமாக எடைபோட முடியாது. 2024 யு-19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவர்கள் தான் சாம்பியன் பட்டம் வென்றார்கள். அதுமட்டுமின்றி, நடப்பு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றியும் அவர்களுக்குப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
இதற்கு முன் தொடர்ந்து இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள வங்கதேச அண்டர் 19 அணி, உலகக்கோப்பையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர நினைக்கிறது. எனவே, ஆசிய கோப்பைத் தோல்விக்கு இன்று இந்தியா பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியா - வங்கதேச அண்டர் 19 போட்டிகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்தியாவின் கை தான் ஓங்கியுள்ளது.
மொத்த போட்டிகள்: 28
இந்தியா வெற்றி: 21
வங்கதேசம் வெற்றி: 6
முடிவில்லை: 1
உலகக்கோப்பையில்: 7 முறை மோதியதில் இந்தியா 5 முறையும், வங்கதேசம் 2 முறையும் வென்றுள்ளன.
போட்டி: இந்தியா U19 vs வங்கதேசம் U19
இடம்: குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ.
நேரம்: இன்று (ஜனவரி 17) மதியம் 1:00 மணிக்கு (இந்திய நேரப்படி).
டிவி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Star Sports).
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலியில் இலவசமாகப் பார்க்கலாம்.
இந்தியா: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, வேதாந்த் திரிவேதி, விஹான் மல்ஹோத்ரா, அபிஞான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வான்ஷ் பங்காலியா, ஆர்.எஸ். அம்ரிஷ், கனிஷ்க் சௌஹான், ஹெனில் படேல், தீபேஷ் தேவேந்திரன், கிலன் படேல்.
வங்கதேசம்: ஜாவத் அப்ரார், எம்டி ரிஃபாத் பெக், அஜிசுல் ஹக்கீம் தமிம் (கேப்டன்), கலாம் சித்திகி அலீன், எம்டி ஃபரித் ஹசன் பைசல், சாமியுன் பஷீர் ரத்துல், எம்டி அப்துல்லா, சாத் இஸ்லாம் ரசின், ஷேக் பர்வேஸ் ஜிபோன், ஷாதின் இஸ்லாம், இக்பால் ஹுசைன் எமோன்.