பெனோனி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை மற்றும் யு19 உலகக்கோப்பை என்று 3 வகையான தொடர்களையும் 9 மாதங்களில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி பறிகொடுத்துள்ளது.
யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 4வது முறையாக யு19 உலகக்கோப்பை தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களை விளாசினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஆதார்ஷ் சிங் 47 ரன்களும், முருகன் அபிஷேக் 42 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியின் பியர்ட்மேன் மற்றும் ராஃப் மெக்மில்லன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக கடந்த 9 மாதங்களில் மட்டும் இந்திய அணி மொத்தமாக 3 முக்கிய இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது. அதேபோல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
தற்போது யு19 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மகளிர் அணி ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணியிடம் 3 வகையான உலகக்கோப்பையை உள்ளது. இதனால் கிரிக்கெட்டையே ஆஸ்திரேலியா அணியின் பெயரில் எழுதி வைத்துவிடலாம் என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.