U19 WC Final: பெரிய மேட்ச் ஆடப் பிறந்தவன்.. வைபவ் சூர்யவன்ஷி செய்தது சாதாரண விஷயமே இல்லை - அஸ்வின்
ஹராரே: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி அசத்தியது. இந்த வெற்றியின் நாயகனாக இருந்தவர் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இவரது ஆட்டத்தைப் பார்த்து வியந்துபோன இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடிப்பார் என்று கட்டியம் கூறியுள்ளார்.
அதிரடி சரவெடி - 175 ரன்கள்
ஹாராரே மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வைபவ் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வெறும் 80 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 175 ரன்களைக் குவித்து மிரட்டினார். இதில் 15 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் அடங்கும்.
அதாவது தனது மொத்த ரன்களில் 150 ரன்களை பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமே எடுத்துள்ளார். 85 சதவீத ரன்கள் எல்லைக்கோட்டைத் தாண்டியே வந்துள்ளது என்பது ஆச்சரியமான விஷயம். ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றிலேயே ஒரு வீரர் அடித்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுதான்.

அஸ்வின் பாராட்டு
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
"19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. இது நம்பமுடியாத ஒன்று. அரையிறுதியில் 300 ரன்களுக்கு மேல் இலக்கைத் துரத்தும்போது 33 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். இப்போது இறுதிப்போட்டியில் சதம் அடித்துள்ளார். பெரிய போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்ற பக்குவம் அவருக்கு இப்போதே வந்துவிட்டது. பெரிய போட்டிகளுக்காகவே பிறந்தவர் போல அவர் விளையாடுகிறார்" என்று அஸ்வின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சீனியர் அணியில் இடம்?
மேலும் பேசிய அஸ்வின், வைபவ் சூர்யவன்ஷிக்கு விரைவில் இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். "டி20 உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்த பிறகு, வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய சீனியர் அணியிலிருந்து அழைப்பு வந்தால் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். அந்த அளவிற்கு அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார்" என்று அஸ்வின் கூறியுள்ளார். 14 வயதே ஆன ஒரு சிறுவனுக்கு மூத்த வீரர் ஒருவர் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடர் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆதிக்கம் இருந்தது. அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவரே முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 439 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 169 ஆக உள்ளது.
இமாலய வெற்றி
இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் சதத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஓர் அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. அடுத்து பதிலடி கொடுத்த இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டி சாதனை ஆட்டம் மூலம் வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications