”சச்சின் தாஸ்” என் பெயருக்கு பின் இருக்கும் கதை இதுதான்.. தாய் கர்ப்பமான போதே தந்தை எடுத்த முடிவு!
மும்பை : உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய யு19 வீரர் சச்சின் தாஸ்-க்கு சச்சின் என்று பெயர் வைத்ததற்கான காரணம் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை யு19 தொடரின் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலமாக தொடர்ந்து 5வது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் சச்சின் தாஸ்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இந்திய யு19 வீரரான சச்சின் தாஸ் களம் புகுந்தார். அந்த போட்டியில் எந்த பதற்றமும் கொள்ளாமல் 47 பந்துகளில் அரைசதம் அடித்ததோடு, ஒரு சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 95 பந்துகளில் 96 ரன்களை விளாசினார். ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை என்றாலும், மக்கள் மனதில் ஆட்டநாயகன் இவர் தான்.
இந்தியாவில் பலருக்கும் சச்சின் என்று பெயரை ரசிகர்கள் இப்போதும் தங்களது குழந்தைகளுக்கு வைப்பதுண்டு. உள்ளூர் கிரிக்கெட்டிலேயே சச்சின் என்ற பெயர் கொண்ட ஏராளமான வீரர்களை காண முடியும். ஆனால் அவர்களில் பலரும் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்ததில்லை. ஆனால் இளம் வயதிலேயே பலரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் இந்த சச்சின் தாஸ்.
இந்த நிலையில் இவருக்கு சச்சின் என்ற பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் தாஸ். பல்கலைக்கழக அளவில் கிரிக்கெட் விளையாடிய அவர், அதற்கு மேல் செல்ல முடியாமல் வாழ்க்கையை கடத்தியுள்ளார். இதன் பின் இவருக்கு திருமண நடந்தபின், மனைவி கர்ப்பமாக இருந்திருக்கிறார்.
அப்போது சஞ்சய் தாஸ், தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும். என் மகனுக்கு சச்சின் என்பதே பெயர் என்று தீர்மானமாக இருந்துள்ளார். தொடர்ந்து சஞ்சய் தாஸின் எண்ணப்படி ஆண் குழந்தை பிறக்க, உடனடியாக சச்சின் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பெயருக்கு ஏற்றபடி 4.5 வயதிலேயே பேட்டினை கையில் கொடுத்து கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பியுள்ளார் சஞ்சய் தாஸ். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications