ஒரே கல்லில் 2 மாங்காய்.. டி20 உலகக்கோப்பை அங்கு நடக்கதான் அதிக வாய்ப்பு.. ஐபிஎல்-க்கும் ஸ்கெட்ச்!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சூழலில் டி20 உலகக்கோப்பை தொடர் எந்த நாட்டில் நடக்க அதிகம் வாய்ப்புள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த காரணத்தால் ஐபிஎல் தொடரை பாதியிலேயே ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடரையும் இந்தியாவில் நடத்தக்கூடாது என முன்னாள் வீரர்கள் பலர் கோரி வருகின்றனர். இந்நிலையில் அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இழுபறி
டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதே காலக்கட்டத்தில் தான் கொரோனா வைரஸின் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்தப்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

SGM கூட்டம்
இதனை தீர்மானிக்க வரும் ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே மே 29ம் தேதி, SGM எனப்படும் 'சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை' பிசிசிஐ கூட்டுகிறது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.

அமீரகம்
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ-ல் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், தற்போது வரை இந்தியாவில் தான் டி20 உலகக்கோப்பை நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. ஒருவேளை அக்டோபரில் நிலைமை சரியில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-ன் 2வது தேர்வாக உள்ளது. எனினும் இதுகுறித்த முடிவு ஜூன் மாதத்திற்கு பின்னர் தான் முடிவு செய்யப்படும்.

அதிகப்படியான வாய்ப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு குறையாது என வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இதனால் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அக்டோபர் மாதம் அங்கேயே டி20 உலகக்கோப்பையும் நடக்கவே அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications