ஷார்ஜா: ஷார்ஜாவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் கடைசி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) எதிர்கொண்டது. இந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே முன்னேறி விட்ட நிலையில், இது முக்கியத்துவம் இல்லாத போட்டியாகவே இருந்தது. எனினும், ஐக்கிய அரபு அமீரகம் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்று ஒரு சிறந்த டி20 போட்டியாக இதை மாற்றியது.
இந்தப் போட்டியில், கடைசி பந்து வரை போராடிய ஐக்கிய அரபு அமீரக அணி, வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆப்கானிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி தொடரின் முடிவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், கடைசி ஓவர் வரை அனல் பறந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் உள்ளிட்ட ஆறு முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இப்ராஹிம் ஸத்ரான் தலைமையில் இரண்டாம் நிலை ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை நோக்கிச் சென்ற ஐக்கிய அரபு அமீரக அணி, ஆசிப் கானின் அதிரடியால் வெற்றிக்கு மிக அருகில் வந்தது.
போட்டியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் இறுதி ஓவரை வீச ஃபரீத் அஹ்மத் வந்தார். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றிக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் 25 பந்துகளில் 40 ரன்களுடன் ஆசிப் கான் ஆக்ரோஷமாக இருந்தார். முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய அவர், இரண்டாவது பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதனால் ஆப்கானிஸ்தான் முகாமில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் வந்ததால், கடைசி 4 பந்துகளில் வெறும் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய நிலைக்கு ஐக்கிய அரபு அமீரகம் வந்தது.
ஆனால், இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஃபரீத் அஹ்மத், தனது அனுபவத்தைக் காட்டினார். அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 'டாட்' பால்களாக வீசி ஆட்டத்தை மீண்டும் ஆப்கானிஸ்தான் பக்கம் திருப்பினார். கடைசி பந்தில் ஆசிப் கான் விக்கெட்டை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணிக்கு 4 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பரிசளித்தார். ஐக்கிய அரபு அமீரக அணி இந்தத் தொடரில் ஒரு வெற்றிகூட பெறாமல் வெளியேறினாலும், அவர்களின் போராட்டம் ரசிகர்களின் மனதை வென்றது.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் (40) மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் (48) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்தது. ஸத்ரான் தனது நேர்த்தியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும், இந்த ஜோடி பிரிந்த பிறகு, ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது.
அந்த நேரத்தில் களமிறங்கிய கரீம் ஜனத், வெறும் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில் ஹைதர் அலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
171 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு, கேப்டன் முஹம்மது வசீம் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். அவர் 29 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் விளாசினார். முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் அவர் அடித்த 'இன்சைடு அவுட்' சிக்ஸர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பவர் பிளே ஓவர்களில் ஆப்கானிஸ்தானை விட அதிக பவுண்டரிகளை அடித்து அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது. பவர் பிளேவில் ஆப்கானிஸ்தான் அணி 4 பவுண்டரிகளே அடித்த நிலையில் அமீரக அணி 7 பவுண்டரிகளை அடித்து இருந்தது.
இருப்பினும், வசீம் ஆட்டமிழந்த பிறகு, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான முஜீப் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். இதனால், கடைசி கட்டத்தில் ரன் ரேட் அழுத்தம் அதிகரித்தது. இறுதியில் ஆசிப் கான் தனி ஒருவனாகப் போராடியும், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இந்தப் போட்டி, வரவிருக்கும் ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரக அணி கடும் சவாலை அளிக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்தது.