என்னை நீக்கிவிட்டு அணியை கைப்பற்ற முயன்ற பயிற்சியாளர்.. உமேஷ் யாதவ் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
மும்பை: தனது முன்னாள் மாநில அணியான விதர்பாவின் பயிற்சியாளர், தன்னை அணியிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டதாக இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மூத்த வீரரான தான் வெளியேறி விட்டால் அணியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என அவர் நினைத்ததாகவும் கூறி இருக்கிறார். முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு வந்த போது பெங்கால் அணி அவருக்கு ஆதரவு அளித்தது போல தனது மாநில அணி ஆதரவு அளிக்கவில்லை என உமேஷ் யாதவ் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்திய அணிக்காக 57 டெஸ்ட், 75 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள உமேஷ் யாதவ், கடந்த 2008 முதல் சுமார் 18 ஆண்டுகள் விதர்பா அணிக்காக விளையாடினார். ஆனால் 2026-27 உள்நாட்டு சீசனில் அவர் திடீரென பஞ்சாப் அணிக்கு மாறினார்.

இந்த அணி மாற்றம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய உமேஷ் யாதவ், "கடுமையான தசைநார் கிழிசல் காயத்தால் பாதிக்கப்பட்ட எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் உடற்தகுதி பெற ஒரு முழு ஆண்டு தேவைப்பட்டது. முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு வந்த போது பெங்கால் கிரிக்கெட் சங்கம் வாய்ப்பு கொடுத்தது போல் என் சொந்த மாநிலமான விதர்பாவிடம் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக என்னை அணியிலிருந்து வெளியேற்றவே நினைத்தனர்.
அணியில் எஞ்சியிருந்த ஒரே மூத்த வீரரான என்னை வெளியேற்றிவிட்டால், தனக்கு எதிராக யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், தனது ஆதிக்கம் மட்டுமே நிலைக்கும் என்று விதர்பா பயிற்சியாளர் நினைத்தார். அதன்படியே என்னை ஓரங்கட்டினார். அதனால்தான் மனமுடைந்து நான் அந்த அணியை விட்டு வெளியேறினேன்.
அதேபோல் பிசிசிஐ தேர்வாளர்களும் வீரர்களிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும். வயதை மட்டுமே ஒரு தடையாகப் பார்க்கக் கூடாது. 38 வயதான ஒரு வீரரால் வேகமாகப் பந்துவீச முடியவில்லை, சரியாக ஃபீல்டிங் செய்ய முடியவில்லை என்றால், அதை அவரிடமே நேரடியாகச் சொல்லிவிட வேண்டும். அதை விடுத்து பொய் நம்பிக்கையைக் கொடுத்து வீரர்களைக் குழப்பத்தில் வைக்கக் கூடாது" என்று உமேஷ் யாதவ் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

